TASMAC: `கடந்த ஆட்சியிலும் ரூ.10 அதிகமாக மது விற்கப்பட்டிருக்கிறது' – சொல்கிறார் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தில், டாஸ்மாக் முறைகேடு புகார்கள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், அவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உட்பட பிற அலுவலகங்களிலும், டாஸ்மாக் நிறுவனத்துக்கு சப்ளை செய்யும் மதுபான ஆலைகளிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. ஆனால், இதுவரையிலும் முதலமைச்சரோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ எந்த பதில் அறிக்கையும் வெளியிடவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டிருக்கிறது. இது குறித்து இந்த அரசு முழுமையான விளக்கம் தெரிவிக்கவில்லை. இன்று, அவையில் இதைச் சார்ந்த மானியக் கோரிக்கை வருகிறதென்பதால், இந்த விவகாரத்தை அவைக்கு கொண்டு வந்தேன். அப்போது, இதுபற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டது மட்டுமல்லாமல், இது குறித்து பேச கண்டிப்பாக அனுமதி தர மாட்டேன் என்று அவைத் தலைவர் சொன்னார்.” என்று குற்றம்சாட்டினார்.

அதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் உரையாற்றிய மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “டாஸ்மாக் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் வெளியில் சில கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.

அவர்கள் ஆட்சியில் நடந்ததை மறந்துவிட்டு, ஏதோ இப்போது நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதற்காக, வெளியில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்தால் நேரலையில் மக்கள் பார்ப்பார்கள், இங்கு பேசினால் முழுதாக கொண்டு சேர்க்க முடியாது என இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

2011-ல் இதே மானிய கோரிக்கையில் நத்தம் விஸ்வநாதன் (முன்னாள் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் 2011 – 2016), “இந்தியா முழுவதும் மது இருக்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கு கொண்டுவர முடியாது.

மத்திய அரசு நினைத்தால், அதனால் ஏற்படும் இழப்புகளை நிதியாகக் கொடுத்துவிட்டு, நாடு முழுவதும் மதுவிலக்கைக் கொண்டுவரும்போது, தமிழ்நாட்டிலும் அது பின்பற்றப்படும்” என்று கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் மது இருப்பதைப் போலவும், மது விற்பனையால்தான் அரசு நடைபெறுவதைப் போலவும் சில அரசியல் இயக்கங்கள் தேர்தலை மனதில் வைத்து வெளியில் பேசுகின்றன..

டாஸ்மாக் நிறுவத்தின் சில்லறை விற்பனைக் கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுவது ஏதோ இந்த நான்காண்டுகளில் நடைபெறுவதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதன்மூலம் அரசுக்கு ஒரு அவப்பெயரை உருவாக்குவதற்கான முயற்சிகளைச் சிலர் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2016 – 2021 ஐந்தாண்டுகளில் கூடுதலாக 10 ரூபாய் வைத்தும், அதற்கு மேலும் கூடுதலாக விலை வைத்தும் மது விற்பனை செய்யப்பட்டதாக 15,405 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

அவர்களிடமிருந்து, ரூ. 14.83 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. அப்போது நடந்ததெல்லாம் பேசப்படுவதில்லை. இப்போது இந்த 4 ஆண்டுகளில் ஏறத்தாழ ரூ. 6.79 கோடி, கூடுதலாக விலை வைத்து மது விற்பனை செய்த பணியாளர்களிடமிருந்து அபராதமாக வசூலிக்கப்பட்டு, சில பேர் பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

டாஸ்மாக் நிறுவனம் வெளிப்படையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் மதுவிலக்கு வரும்போது, தமிழ்நாட்டிலும் அதை முதலமைச்சர் நடைமுறைப்படுத்துவார்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.