அதிக கோடிகளை கொட்டியது வீண்… ரிஷப் பண்ட் போல் சொதப்பும் இந்த 3 வீரர்கள்!

IPL 2025: ஐபிஎல் என்றாலே அதிக பணம் புழங்கும் கிரிக்கெட் தொடர் என்பது அனைவரும் அறிந்ததே. வீரர்கள் கோடிகளில் சம்பளம் பெறுவார்கள். அதுவும் வீரர்களை அணிகள் ஏலத்தில் தான் எடுப்பார்கள். இது பல இளம் வீரர்களுக்கு வாழ்வில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் சொல்லலாம்.

IPL 2025: அந்த 4 வீரர்கள்

வெறும் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ரூ.1.10 கோடியை ஒரு சீசனுக்கு சம்பளமாக பெறுகிறார் என்றால் அது ஐபிஎல் தொடரால் மட்டுமே சாத்தியம். இப்படியிருக்க, சில வீரர்களுக்கு இந்த இந்த அதிக சம்பளம் கூட பெரிய அழுத்தத்தை ஏற்படுத்திவிடலாம். ரிஷப் பண்ட் உள்பட கடந்த மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டு, தற்போது தொடர்ந்து சொதப்பி வரும் 4 இந்திய வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.

IPL 2025: ரிஷப் பண்ட்

மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் (Rishabh Pant) தான் அதிக தொகைக்கு வாங்கப்பட்டவர். இல்லை, இல்லை… ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட இவரை தான் கேப்டனாகவும் நியமித்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. இவர் தலைமையில் லக்னோ தற்போது 9 போட்டிகளில் 5இல் வென்று, 4இல் தோற்றிருக்கிறது. சுமாரான நிலையில் இருந்தாலும் தற்போது பெரிய பிரச்னையே அவரது பேட்டிங்தான். இது அணியையும் கடந்த சில போட்டிகளில் பாதிக்கிறது. 

அதுவும் டெல்லி உடனான கடைசி போட்டியில் இவர் 20வது ஓவரில் இறங்கியது புரியாத புதிர்தான். சிஎஸ்கே (Chennai Super Kings) உடன் மட்டும் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்த பண்ட் மொத்தம் 8 இன்னிங்ஸில் விளையாடி 106 ரன்களையே அடித்துள்ளார். சிஎஸ்கேவுக்கு எதிரான 63 ரன்களை கழித்தால் 7 இன்னிங்ஸில் 43 ரன்கள்தான் வரும். இது நிச்சயம் பெரிய பிரச்னைதான்.

IPL 2025: வெங்கேடஷ் ஐயர்

ரிஷப் பண்டையாவது அதிக தொகைக்கு எடுப்பார்கள் என எதிர்பார்த்ததுதான். ஆனால் வெங்கேடஷ் ஐயரை (Venkatesh Iyer) ரூ.23.75 கோடிக்கு கேகேஆர் எடுத்தது பலருக்கும் ஷாக் மேல் ஷாக் தான். 

இவரும் தற்போது அதிக அழுத்தத்தில் இருப்பதுபோல் தோன்றுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் பயங்கர எதிர்பார்ப்பு எழும், ஆனால் அவர் தொடர் ஏமாற்றத்தையே அளித்து வருகிறார். இவர் 6 இன்னிங்ஸில் 135 ரன்களையே அடித்திருக்கிறார். 

IPL 2025: இஷான் கிஷன்

இஷான் கிஷனை (Ishan Kishan) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.11.25 கோடி கொடுத்து தூக்கியது. இவரை தூக்கி வளர்த்த மும்பையே கழட்டிவிட்டாலும், இந்திய அணி இவரை டி20 அணியில் எடுக்க யோசித்தாலும் காவ்யா மாறன் & கோ மிகுந்த நம்பிக்கையில் இவரை தூக்கியது. 

அதை போல், முதல் போட்டியிலேயே இவரும் 106 ரன்களை அடித்து மிரட்டினார். ஆனால் அதற்கு பின் அவர் ஜொலிக்கவே இல்லை. அதற்கு பின் 6 இன்னிங்ஸில் விளையாடி 32 ரன்களையே அடித்திருக்கிறார். சன்ரைசர்ஸ் அணியே மொத்தமாக படுத்துவிட்ட நிலையில் இவரின் மோசமான ஃபார்ம் மேலும் பிரச்னைதான் அவர்களுக்கு…

IPL 2025: முகமது ஷமி

எல்லாம் பேட்டர்களாகவே இருக்கிறதே, பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லையா என நீங்கள் கேட்கலாம். ஆனால் இவர் இந்த லிஸ்டில் சொல்லவே மனசு வலிக்குது. முகமது ஷமியை (Mohammed Shami) ரூ.10 கோடி கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எடுத்தது. பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

இவர் இங்கிலாந்து தொடரிலோ, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலோ விளையாடுவதற்கு முன்பாகவே, உள்நாட்டு போட்டிகளை வைத்து SRH இவரை எடுத்தது. ஆனால், முன்னர் அளித்த தாக்கத்தை இப்போது அவரால் அளிக்க முடியவில்லை. அதுவும் பழைய பந்தில் இன்னும் மோசம். 7 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை மட்டும் எடுத்திருக்கும் ஷமியின் சராசரி 52.20, எகானமி 10.8 என்பது அதிர்ச்சியையே அளிக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.