சென்னை: டாஸ்மாக் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக்கி அமலாக்கத்துறையின் விசாரணையை முடக்க தமிழக அரசு முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை தொடர் சோதனை நடத்தினர். இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அறிவுறுத்தக் கோரியும் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை முதலில் விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. பின்னர் இந்த வழக்கு விசாரணையில் இருந்து இந்த நீதிபதிகள் விலகிக்கொண்டனர்.
அதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விகாஸ்சிங், விக்ரம் சவுத்ரி ஆகியோரும், தமிழக அரசின் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும் ஆஜராகி வாதிடுகையில், ‘‘அமலாக்கத்துறை சோதனையின்போது பெண் அதிகாரிகள் 60 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஒரு சில பெண் ஊழியர்கள் மட்டும் நள்ளிரவில் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மொபைல் போன்களை பறிமுதல் செய்து அதில் இருந்த விவரங்களை சேகரி்த்துள்ளனர். உயர் அதிகாரிகளை தூங்கக்கூட அனுமதிக்காமல் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். எந்த எப்ஐஆரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்பதை தெரிவிக்கவில்லை. சோதனை முடிந்ததும் ரூ. ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சோதனையின்போது ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை. அமலாக்கத்துறை வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக் நிறுவனம் மீதான நற்பெயருக்கும், மறைமுகமாக தமிழக அரசின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக பழிவாங்கும் வகையில் அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த சோதனை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது” என வாதிட்டனர்.
பதிலுக்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்கள் எஸ்.வி.ராஜூ, ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் அமலாக்கத்துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் தங்களது வாதத்தில், ‘‘இந்த சோதனை மாநில போலீஸார் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருந்த 41 எப்ஐஆர்களின் அடிப்படையில் நடத்தப்பட்டது. இந்த சோதனையின் அடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் நடைபெற்ற முறைகேடுகள் மூலமாக ரூ.1,000 கோடிக்கு மேல் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் யாரையும் துன்புறுத்தவில்லை. மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை. அமலாக்கத்துறை சோதனைக்கு மாநில அரசிடம் முன் அனுமதி பெறவேண்டியதில்லை. எனவே எங்களது சோதனைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்” என வாதிட்டனர்.
இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
அமலாக்கத்துறையின் இந்த சோதனை கடந்த 2017 முதல் 2024 வரை டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது பதியப்பட்டுள்ள 41 எப்ஐஆர்களின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாகவும், சிலர் நள்ளிரவில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதிகாரிகளை கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றதாகவும் கூறப்படும் வாதம் ஏற்புடையதல்ல. சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்பது நாட்டு மக்களுக்கு எதிரான அதிதீவிரமான குற்றம். நாட்டின் நலன் கருதியே இந்த சோதனையை அமலாக்கத்துறை நடத்தியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் பொருளாதார நீதியை வழங்கியுள்ளது.
அரசியல் ரீதியாக பழிவாங்கும் வகையில், உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட சோதனை என அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறி்த்து விசாரிப்பது நீதிமன்றத்தின் வேலை அல்ல. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் மற்றொரு கட்சி, ஆளுங்கட்சி மீது குறைகூறுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில்தான் நீதியை உறுதி செய்ய முடியும். எந்த வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்பதை வெளிப்படையாக கூறிவிட்டால் ஆதாரங்களை அழிக்கவும், மறைக்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு தெரிவிக்க சட்டத்திலும் இடமில்லை. இந்த சோதனை ஆரம்பகட்ட நடவடிக்கைதான். டாஸ்மாக் நிர்வாகம் நிவாரணம் கோரி அமலாக்கத்துறையை நாடலாம்.
பொதுவாக அரசு ஊழியர்கள் இதுபோன்ற விசாரணை அமைப்புகளின் சோதனைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவர்களின் கடமை. சோதனைக்கான உத்தரவு நகலை வழங்க வேண்டும் எனக் கோர முடியாது. டாஸ்மாக் மதுபான கொள்முதல், பார்களுக்கான உரிமம் மற்றும் நியமன முறைகேடுகள் தொடர்பாக கட்டாயப்படுத்தி வாக்குமூலங்களைப் பெற்றதாக அதிகாரிகள் யாரும் குற்றம்சாட்டவில்லை. சட்டரீதியாகவே ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதில் எந்த சட்டவிரோதமும் இல்லை. திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்படும்போது தகவல்கள் கசியக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் சிறை பிடிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். அதை துன்புறுத்தல் என எடுத்துக்கொள்ள முடியாது.
உணவு, ஓய்வு வழங்கப்படவில்லை என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் கணக்கில் கொள்ள முடியாது. இந்த சோதனையால் தங்களது அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கருதினால் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம். தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் இந்த வழக்குகளை எதற்காக தொடர்ந்துள்ளன என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. டாஸ்மாக் நிர்வாகம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை தேச நலனுக்கு எதிராக பயன்படுத்த முடியாது. இதுபோன்ற சோதனையால் கூட்டாட்சி எந்த வகையிலும் பாதிக்காது.
சட்டங்களை அமல்படுத்தும்போது சில நேரங்களில் இதுபோன்ற அசவுகரியங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். டாஸ்மாக் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக்கி அமலாக்கத்துறை விசாரணையை முடக்க தமிழக அரசு முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது. எனவே அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க முடியாது என்பதால் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் சார்பில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். அமலாக்கத்துறை சட்டப்படி தங்களது விசாரணையை தொடரலாம். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.