இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த (பிடிஏ) பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்கக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: இரு நாடுகளிலும் வேலை உருவாக்கம் மற்றும் குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த பிடிஏ ஒரு சிறப்பான வாய்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம், இருதரப்பு வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பு சீராகும். பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை பிரதமர் மோடி மற்றும் துணை அதிபர் வான்ஸ் ஆகியோர் நேர்மறையாக மதிப்பிட்டனர்.

அதேநேரத்தில், எரிசக்தி, பாதுகாப்பு, மூலோபாய தொழில்நுட்பங்கள் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டனர்.

இந்தியாவுடனான தனது வர்த்தக பற்றாக்குறையை ஈடுசெய்ய உதவும் என்ற நம்பிக்கையில் இந்தியாவுக்கான பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரிக்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக ஒத்துழைப்பு வழங்குவதும் இந்த பேச்சுவார்தையின்போது முக்கியத்துவம் பெற்றது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் பரஸ்பர வரி விதிப்பின் அச்சுறுத்தலை தடுக்க நியாயமான மற்றும் சமநிலையான வர்த்தக உறவை இந்தியாவுடன் பேணுவதற்கான முக்கியத்துவத்தை வான்ஸ் இந்த பேச்சுவார்த்தையின்போது அடிக்கோடிட்டு காட்டினார்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா நடத்தும் குவாட் அமைப்பின் உச்ச மாநாடு குறித்தும் பேசப்பட்டது. இதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்பதை பார்க்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர், உக்ரைன் மற்றும் காசா போர் நிலவரங்கள் குறித்த விவாதமும் நடைபெற்றது, அப்போது, அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்பதை பிரதமர் மோடி மீண்டுமொருமுறை ஆணித்தரமாக வலியுறுத்தினார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து வான்ஸ், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஜெய்ப்பூருக்கு சுற்றுலா புறப்பட்டனர். இன்று காலை ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட்ட பிறகு ஜெய்ப்பூருக்கு திரும்பும் அவர்கள் நாளை அமெரிக்காவுக்கு புறப்படுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.