ஊட்டி துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்பது உறுதி

புதுடெல்லி: ஊட்டியில் துணைவேந்தர்கள் வருடாந்திர மாநாட்டுக்கு குடியரசு துணைத்தலைவர் தலைமை வகிக்கிறார் என அவரது செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், டாக்டர் சுதேஷ் தன்கர் ஆகியோர் மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வரவுள்ளனர். இந்தப் பயணத்தின்போது, ஏப்ரல் 25 அன்று ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அக்கூட்டத்திற்கு தலைமை வகிக்க உள்ளார்.

2025 ஏப்ரல் 26 அன்று, ஜக்தீப் தன்கர் ஊட்டியில் உள்ள முத்தநாடு மந்து தோடர் கோயிலுக்குச் செல்ல உள்ளார். அதைத் தொடர்ந்து, 27-ம் தேதி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரம் உட்பட பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஆளுநரிடம் இருந்த அதிகாரங்களை தமிழக அரசுக்கு மாற்றம் செய்யும் 10 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

10 மசோதாக்களும் சட்டமாக்கப்பட்டு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு போட்டியாக ஊட்டி ராஜ்பவனில் ஏப்ரல் 25, 26-ம் தேதி ஆகிய 2 நாட்கள் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டில் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என அறிவிக்கப்பட்டது. இதை தற்போது, குடியரசு துணைத் தலைவர் செயலகமும் உறுதிப்படுத்தி உள்ளது.

பாதுகாப்பு ஒத்திகை: குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கரின் வருகையை ஒட்டி ஹெலிகாப்டர் ஒத்திகை மற்றும் வாகன பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ஊட்டி தீட்டுக்கல் மைதானம் மற்றும் மாற்று ஏற்பாடாக மசினகுடியில் ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரை இறக்குவது குறித்து சோதனை செய்யப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.