ஜெட்டா: பிரதமர் மோடியின் விமானம் நேற்று சவுதி வான் எல்லைக்குள் நுழைந்ததும், அந்நாட்டு போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்து அழைத்துச் சென்றன. பிரதமர் மோடியின் வருகைக்கு அளிக்கப்பட்ட இந்த அரியவகை சிறப்பு மரியாதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பிரதமர் மோடி சவுதி, அரேபியா வரும்படி அந்நாட்டு இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார்.
வெளிநாட்டு தலைவர்களின் வருகையின்போது, விமானநிலையத்தில் அந்நாட்டு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம். பிரதமர் மோடியின் சிறப்பு விமானம் சவுதி வான் எல்லைக்குள் நுழைந்ததும், அந்த விமானத்துக்கு சவுதி போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்து ஜெட்டா நகருக்கு அழைத்துச் சென்றன. சவுதி அரேபியாவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளதால், பிரதமர் மோடிக்கு இந்த அரியவகை சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதற்கு முன் கடந்த 2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றுள்ளார். இந்தியா – சவுதி அரேபியா இடையே நடைபெறும் இருதரப்பு கூட்டத்துக்கு, பிரதமர் மோடியும், சவுதி இளவரசரும் தலைமை தாங்குகின்றனர்.
இதில் பொருளாதார உறவு, பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் இருதரப்பினர் இடையே விண்வெளி, எரிசக்தி, சுகாதாரம், அறிவியல், கலாச்சாரம் மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
சவுதி பயணத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சவுதி அரேபியா இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகளில் ஒன்று. இந்தியா – சவுதி அரேபியா இடையிலான உறவு அளவற்ற ஆற்றலுடையது. இது மேலும் வலுவடைய வேண்டும் என விரும்பும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தொலைநோக்கு பார்வையுடையவர். விஷன் 2030 என்ற தலைப்பின் கீழ் அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் உலகளாவிய பாராட்டை பெற்றது.
நான் சவுதி இளவரசரை சந்திக்கும்போதெல்லாம், அவர் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவரது அறிவு, முற்போக்கு சிந்தனை, மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் ஆர்வம் ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவுடனான இந்திய உறவை நான் பெருமையாக கருதுகிறேன். எங்கள் உறவு புதிதல்ல. இரு நாடுகள் இடையேயான கலாச்சார பரிமாற்றம் நூற்றுாண்டுகள் பழமையானது. அனைத்து துறைகளிலும், இரு நாடுகள் இடையே நீண்ட நெடிய தொடர்பு உள்ளது.
டெல்லியில் கடந்த 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு – ஐரோப்பா வர்த்தக வழித்தடம் (ஐஎம்இஇசி) வரும்காலங்களில் அனைத்து துறைகளிலும் இணைப்பை ஏற்படுத்தும். இது ஒட்டுமொத்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இந்த வழித்தடம் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை ஒருங்கிணைக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.