புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு ஸ்ரீநகர் சென்றார். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அவர் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்கள் தங்களுக்கு நீதி வேண்டும் எனவும், குடும்பத்தினரின் இழப்பு வீண்போகக் கூடாது எனவும் வலியுறுத்தினர். அதன்பின் அமித் ஷா பஹல்காம் சென்று பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
குல்காமில் கடும் சண்டை: இதற்கிடையே, பாராமுல்லாவில் நேற்று தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி நடைபெற்றது. உரி நலா என்ற இடத்தில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. இந்நிலையில் காஷ்மீரின் குல்காம் பகுதியில் உள்ள தானி மார்க் என்ற இடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு நேற்று மாலை விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
சவுதி அரேபியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று முன்தினம் இரவு அவசரமாக நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:
5 முக்கிய முடிவுகள்: காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கீழ்கண்ட முக்கிய முடிவுகளை எடுத்தது. அதன் விவரம்:
1. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுகிறது.
2. பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் இந்த எல்லை வழியாக மே 1-ம் தேதிக்கு முன்பாக திரும்ப வேண்டும்.
3. சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
4. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் ஒரு வாரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
5. இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்களின் பதவிகள் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இரு நாட்டு எல்லையில் பெருமளவில் படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையே, பாதுகாப்பு படை தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் கூறியதாவது:
விரைவில் பதிலடி: தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு விரைவில் வலுவான பதிலடி கொடுக்கப்படும். தாக்குதல் நடத்தியவர்களுக்கு மட்டும் அல்ல இந்த சதித்திட்டத்துக்கு காரணமானவர் களுக்கும் பதிலடி கிடைக்கும். தீவிர வாதத்தை நாடு பொறுத்துக் கொள்ளாது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.