மதுரை: திருச்செந்தூர் கோயிலில் ரூ.300 கோடி செலவில் நடைபெற்று வரும் பணிகளுக்கு தடை கோரி தாக்கலான மனுவை ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் திருச்செந்தூர் கோயில் தொடர்பான வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிடுமாறு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் தேவைகளுக்காக ரூ.300 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்செந்தூரில் கடந்த ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, 135 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும், சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பாக கோயில் வலைதளத்தில் எந்த பதிவும் இடம் பெறவில்லை.
கோபுரத்தை மறைக்கும் அளவுக்கு விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இந்த கட்டுமானங்களுக்கு கடல் காற்றால் துருப்பிடிக்காத கம்பிக்கு பதிலாக, சாதாரண கம்பியை பயன்படுத்தி உள்ளனர். அவசர வழியும் இல்லை.
சுற்றுச்சூழல் அனுமதி உத்தரவில் குறிப்பிடப்படாத நாழிக்கிணறு, வள்ளி குகை, அறுபடை ஆண்டவன் மண்டபம் போன்ற பகுதிகளிலும் கட்டுமானங்கள் நடைபெற்று வருகின்றன. இவை சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பே தொடங்கியது சாட்டிலைட் புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது.
வள்ளி குகை அருகே 10 அடி ஆழத்துக்கு குழி தோண்டியபோது, புராதனமான ஒரு மண்டபத்தின் சுற்றுச்சுவர் தெரிந்துள்ளது. அதை சிமென்ட் கலவை போட்டு மூடிவிட்டனர். விதிமீறல் காரணமாக, திருச்செந்தூர் கோயிலில் நடைபெற்று வரும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்து, இந்த வழக்கு தொடர்பாக தமிழக தொல்லியல் துறையின் தலைவர், தூத்துக்குடி மாவட்ட கடலோர மேலாண்மை அமைப்பின் தலைவரான மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலின் செயல் அலுவலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிற திருச்செந்தூர் கோயில் வழக்குகளுடன் சேர்க்குமாறு உத்தரவிட்டது.