நாடாளுமன்றமே உயர்வானது; எம்.பி.க்களே எஜமானர்கள்: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கருத்து

புதுடெல்லி: அனைத்து அரசியல் அமைப்புகளைவிட நாடாளுமன்றமே உயர்வானது. எம்பிக்களே எல்லாவற்றையும்விட மேலான எஜமானர்கள் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியலமைப்பு சட்டம் குறித்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஜனநாயக நாட்டில் குடிமகனே உயர்வானவர். ஒரு தேசமும், ஜனநாயகமும் மக்களாலேயே கட்டமைக்கப்படுகிறது. ஒவ்வொரு குடிமகனிடமும் ஜனநாயகத்தின் ஆன்மா வாழ்கிறது. ஜனநாயக நாட்டில் அனைத்து அரசியல் அமைப்புகளைவிட நாடாளுமன்றமே உயர்வானது. நாடாளுமன்றத்தைவிட உயர்வானது எதுவுமே கிடையாது.

அரசியலமைப்பு அலுவலகங்கள் அலங்கார பொருட்கள் கிடையாது. அரசியமைப்பு சட்டத்தின் சாரம்சம் அதன் முகவுரையில் பொதிந்திருக்கிறது. அதாவது, இந்திய மக்கள்தான் உச்ச அதிகாரம் கொண்டவர்கள். மக்களைவிட உயர்ந்தவர்கள் யாரும் கிடையாது என்று அரசியலமைப்பு சட்டம் உறுதிபட கூறுகிறது. உச்ச அதிகாரம் கொண்ட மக்கள், பொதுத்தேர்தலின் மூலம் தங்கள் பிரதிநிதிகளை (எம்பிக்கள்) தேர்வு செய்கிறார்கள். அந்த மக்கள் பிரதிநிதிகள்தான் எல்லாவற்றையும்விட மேலான எஜமானர்கள்.

முன்னாள் பிரதமர் ஒருவர் (இந்திரா காந்தி) நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தினார். அது இந்தியாவின் இருண்ட காலம் ஆகும். அப்போது மக்களின் கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டது. ஜனநாயகம் முடக்கப்பட்டது. அவசர நிலையை அமல்படுத்திய அப்போதைய பிரதமர், அதற்கு பொறுப்பாக்கப்பட்டார்.

நாட்டை ஆளும் அரசுகளால் ஜனநாயகம் வடிவமைக்கப்படவில்லை. மக்களால்தான் ஜனநாயகம் வடிவமைக்கப்படுகிறது. சரியான விஷயத்தை, சரியான நேரத்தில், சரியான குழு அல்லது சரியான நபரிடம் பேச வேண்டும். நீங்கள் தயங்கினால் பலவீனமாகி விடுவீர்கள். ஒரு நாடு தொழிலதிபர்களால் கட்டமைக்கப்படவில்லை. மக்களால் கட்டமைக்கப்படுகிறது. இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசினார்.

தமிழக அரசு மற்றும் ஆளுநர் தொடர்பான வழக்கில் கடந்த 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்படி மாநில அரசின் மசோதா குறித்து ஆளுநர் ஒரு மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும். மாநிலஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் குறித்து குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 17-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசும்போது, “ குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. சூப்பர் நாடாளுமன்றமாக உச்ச நீதிமன்றம் செயல்படுகிறது. உச்ச நீதிமன்றத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 142-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டியது” என்று தெரிவித்தார்.

தற்போது அனைத்து அரசியல் அமைப்புகளைவிட நாடாளுமன்றமே உயர்வானது. மக்கள் பிரதிநிதிகள் எல்லாவற்றையும்விட மேலான எஜமானர்கள் என்று ஜெகதீப் தன்கர் கூறியிருப்பது தேசிய அளவில் விவாதப் பொருளாகி உள்ளது.

மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது, வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு ஆகிய விவகாரங்களில் பாஜக மூத்த எம்பிக்கள் நிஷி காந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் நீதித் துறையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் ஒரு வழக்கு விசாரணையின்போது நேற்று கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் மீது நாள்தோறும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுகுறித்து நாங்கள் துளியும் கவலைப்படவில்லை” என்று தெரிவித்தார்.

தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்து பி.ஆர். கவாய் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். அவருக்கு அடுத்து வரும் நவம்பர் 24-ம் தேதி சூர்ய காந்த் தலைமை நீதிபதியாக பதவியேற்க இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.