Mumbai Indians vs Sunrisers Hyderabad : ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஐபிஎல் நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. இன்று நடக்கும் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது வீரர்கள் மற்றும் நடுவர்கள் பகல்காம் தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள். மேலும், சிக்சர்கள் பவுண்டரிகள் அடிக்கும்போது ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் மைதானத்துக்கு வெளியே இரு அணிகள் சார்பாக நடனம் ஆடும் சியர்கேர்ல்ஸ் நடனமும் இன்றைய போட்டியின்போது இருக்காது. மேலும், மைதானத்தில் பையர்வொர்க்ஸ் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிகசர், பவுண்டரிகள் அடிக்கும்போது மைதானத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டும். அதுவும் இருக்காது என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பகல்காம் தாக்குதலுக்கு இரங்கல்
இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் விராட் கோலி, கேஎல் ராகுல், சுப்மன் கில் உள்ளிட்டோர் பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கும் இந்த கிரிக்கெட் பிளேயர்கள், இந்தியாவில் தீவிரவாதம் இருக்கக்கூடாது, அமைதியும் அன்பு மட்டுமே இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர எல்லாவிதமான சக்தியையும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இறைவன் கொடுக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வதாகவும் விராட் கோலி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் அணிகள் இரங்கல்
பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு ஐபிஎல் நிர்வாகமும், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிகள் உள்ளிட்ட அனைத்து ஐபிஎல் அணிகளும் இரங்கல் தெரிவித்துள்ளன. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இது ஒரு கோழைத்தனமான தாக்குதல், அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் உயிர்களை குறி வைத்து தாக்கியிருக்கும் தீவிரவாதிகளுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்ந்த பல்வேறு முன்னாள் மற்றும் இந்நாள் பிளேயர்கள் கூறியுள்ளனர்.
பகல்காமில் நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் இருக்கும் குட்டி சுவிசர்லாந்து என அழைக்கப்படும் பகல்காம் பைசரான் பள்ளத்தாக்கில் அழகிய புல்வெளி தரைகள் இருக்கின்றன. மிகவும் பிரபலமான சுற்றுலாதளமான அங்கு நேற்றும் (செவ்வாய்க்கிழமை) 2000 சுற்றுலா பயணிகள் இருந்தனர். அப்போது திடீரென அங்கு சென்ற தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொலை செய்தனர். இந்த தாக்குதலில் மொத்தம் 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லக்ஷர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட் பொறுப்பேற்றுள்ளது.