ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பஹல்காம் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் உயிரிழந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அம்மாநில முதல்-மந்திரி உமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார். நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீநகரில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக லடாக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுதிகள் உள்ளிட்டவற்றை தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் சுற்றுலா பயணிகள் தவிர புதிதாக வேறு யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் லடாக் ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை சேகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.