புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்கனிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் காஹர் பால்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஆப்கனிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தைத் தெரிவிக்கிறது. இத்தகைய செயல்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கனத்த இதயத்துடன், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா அடிபணியாது. இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் குற்றவாளிகள் தப்பிக்க மாட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு உதவ மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு உதவ மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு விரைவாக நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
உள்துறை அமைச்சருடன் தனிப்பட்ட முறையில் பேசிய அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் 24 மணி நேரமும் நிலைமையை கண்காணித்து வருகிறார். உடனடி நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு இரண்டு விமானங்களும் மும்பைக்கு இரண்டு விமானங்களும் என நான்கு சிறப்பு விமானங்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதல் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ராம் மோகன் நாயுடு அனைத்து விமான நிறுவனங்களுடனும் அவசரக் கூட்டத்தை நடத்தியுள்ளார். கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்க அவர் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த முக்கியமான நேரத்தில் எந்தவொரு பயணிக்கும் சுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் வழக்கமான கட்டண அளவை பராமரிக்கவும் விமான நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன
மேலும், மாநில அரசுகள், உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, இறந்த நபர்களின் உடல்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ராம் மோகன் நாயுடு உத்தரவிட்டுள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.