சென்னை: வீடுகளை குத்தகைக்கு எடுத்து உரிமையாளர்களுக்கு தெரியாமல் மூன்றாவது நபர்களுக்கு அடமானம், மறுவாடகை அல்லது மறுகுத்தகைக்கு விட்டு ஏமாற்றும் நபர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற மோசடிகளை தடுக்க விழிப்புணர்வு குறும்படமும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்த தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை முகப்பேரில் உள்ள கனகராஜ் என்பவரின் வீட்டை குத்தகைக்கு எடுத்த கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், அந்த வீட்டை கனகராஜூக்கு தெரியாமல் மூன்றாவது நபருக்கு அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டார். இது தொடர்பாக கனகராஜ் அளித்த புகாரில் நொளம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரி்த்து வருகின்றனர்.
இந்த வழக்கில் ராமலிங்கத்துக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கனகராஜ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கடந்த 2023-ம் ஆண்டு விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, இதுபோன்ற நூதன மோசடிகளைத் தடுக்க விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பி்ல் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ், தமிழக டிஜிபி சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
வீட்டின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் மூன்றாவது நபர்களுக்கு அந்த வீட்டை அடமானம் வைப்பது, மறுவாடகை அல்லது மறுகுத்தகைக்கு விடுவது போன்ற மோசடி சம்பவங்கள் தொடர்பாக சென்னை காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதியில் 67 பேரும், தாம்பரத்தில் 342 பேரும், ஆவடியில் 20 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல கடந்த 2013-ம் ஆண்டு முதல் பொருளாதார குற்றப்பிரிவில் பதிவு செய்துள்ள வழக்குகளின் மூலம் ஆயிரத்து 20 உரிமையாளர்கள் ஏமாற்றப்பட்டு ரூ. 65 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகள் சிவில் வழக்கு என கூறி சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடுவதால், இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது நேரடியாக மோசடி வழக்கு பதிவு செய்ய அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்களும் தங்களது வீடுகளை குத்தகைக்கு, வாடகைக்கு விடும்போது வாடகைதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் முழு பின்னணி விவரங்களையும் அலசி, ஆராய்ந்து சட்ட ரீதியாக ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை தரப்பில் குறும்படம் தயாரிக்கப்பட்டு, அந்த வீடியோ ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு வீடியோ தொகுப்பும் வழங்கப்பட்டது. அந்த வீடியோவை பார்த்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் குறும்படத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆவடி காவல் ஆணையர் கே.சங்கர் ஆகியோருக்கும் பாாரட்டு தெரிவித்தார். மேலும், இந்த விழிப்புணர்வு வீடியோ தமிழகம் முழுவதும் ஒளிபரப்பு செய்யப்படும் வகையில் அனைத்து காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்ப தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவி்ட்டுள்ளார்.