Doctor Vikatan: கரும்பு ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சியைத் தருமா, எல்லோரும் குடிக்கலாமா, இதைக் குடித்தால் சளி பிடித்துக்கொள்ளுமா?, நீரிழிவு உள்ளவர்களும், சைனஸ் பிரச்னை உள்ளவர்களும் எடுத்துக்கொள்ளலாமா?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

விக்ரம்குமார்
கரும்புச்சாற்றுக்கு ஏராளமான மருத்துவப் பலன்கள் உள்ளன. ‘செங்கரும்பதனச் சாறு தீர்த்திடும் பித்தமெல்லாம்…’ என்ற பாடல் வரியே கரும்புச்சாற்றின் மகிமைக்குச் சான்று.
கரும்புச்சாறு உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். பித்தத்தையும் குறைக்கக்கூடியது. செரிமானத்தைச் சீராக்குவதிலும் கரும்புச்சாறு பெரிய அளவில் உதவும். செரிமானத்துக்குத் தேவையான என்சைம்களை தூண்டி, அந்தச் செயல் சரியாக நடக்கச் செய்யும். கரும்புச்சாற்றை பொதுவாக எல்லோருமே குடிக்கலாம்.
கரும்புச்சாற்றில் ஐஸ் சேர்க்காமல் குடிப்பதுதான் சரி. குறிப்பாக, குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது ஐஸ் சேர்க்கவே கூடாது. கரும்புச் சாற்றுடன் இஞ்சியும், எலுமிச்சைப்பழச் சாறும் சேர்த்துக் குடிப்பது அற்புதமான பலன்களைத் தரும். தாகத்தையும் தணிக்கும்.

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், அவர்களது ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால் அவ்வப்போது சிறிதளவு கரும்புச்சாறு குடிப்பதில் பிரச்னை இல்லை. அளவு மிக முக்கியம்.
அதேபோல சிலர், கரும்பு ஜூஸில் கூடுதல் சுவைக்காக சர்க்கரை சேர்ப்பார்கள். அதையும் தவிர்க்க வேண்டும். சைனஸ் பிரச்னை உள்ளவர்களும், அதன் வீரியம் அதிகமிருக்கும்போது கரும்பு ஜூஸ் குடிப்பதைத் தவிர்க்கலாம். மற்றபடி, சைனஸ் அறிகுறிகள் இல்லாமல் இருக்கும் நாள்களில் ஐஸ் சேர்க்காமல் குடிக்கலாம். அப்படிக் குடித்தால் ஜலதோஷம் பிடிக்காது.
கரும்புச்சாறு இயற்கை நமக்குக் கொடுத்துள்ள அற்புத பானம். தாகம் தணித்து, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடிய கரும்புச் சாற்றை அளவோடு எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானதே.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.