விழுப்புரம்: சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து, அவரது சொந்த தொகுதியான திருக்கோவிலூரில் நேற்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய மகளிரணிச் செயலாளர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசியதாவது: பெண்கள் இருக்கும்போதே ஆபாசமாகப் பேசுவது திமுகவினரின் பழக்கம். சமுக நீதி, பெண்களுக்கான அரசு என்று கூறிக் கொண்டே பெண்களை இழிவாகப் பேசுவார்கள். நாகரிகமின்றி, வக்கிரமாகப் பேசியுள்ள பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
இந்து மதம் குறித்தும், பெண்கள் குறித்தும் ஆபாசமாகப் பேசிய பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.
தவறு செய்யும் அமைச்சர்களை பாதுகாக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. இதுபோன்ற அமைச்சர்களை வைத்துக்கொண்டு இந்தியாவின் சிறந்த மாநில அரசாக திமுக அரசு திகழ்வதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் கொள்கிறார்.
கோவையில் பயங்கரவாதிகள் நடத்திய பெரிய தாக்குதலை, சிலிண்டர் விபத்து என்று தெரிவித்தனர். இதற்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அதிமுக மற்றும் ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளைக் கொண்டு, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.