புதுடெல்லி,
டென்மார்க்கை சேர்ந்த ஆஸ்ட்ரிட் எஸ்மரால்டா என்ற வெளிநாட்டு பெண் கடந்த 10 மாதங்களாக இந்தியாவில் வசித்து வந்த அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ரிஷிகேஷ் முதல் கோவா, மும்பை வரை பல்வேறு இடங்களுக்கும் சென்ற மகிழ்ச்சியான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இது இந்தியாவில் என்னுடைய 10-வது மாதம். எனது வாழ்க்கையில் நான் எடுத்த சிறந்த முடிவு இதுவும் ஒன்று. எனக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. டென்மார்க்கில் எனக்கு ரசிக்கும்படி ஒன்றும் இல்லை என்பது போல் இருந்தது. என்னுடைய வேலை, வீடு, நண்பர்கள் ஆகிய அனைத்தும் எனக்கு பிடிக்கும். ஆனாலும் அங்கு எனக்கு சலிப்பு ஏற்பட்டது. எப்போதும் தூக்க கலக்கமாகவே இருக்கும்.
அதேநேரம் இந்தியா என்னுடைய நெற்றிக்கண்ணை திறந்துவிட்டது என்றுதான் சொல்ல, வேண்டும். இந்தியா எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இங்கு பல்வேறு விஷயங்களும், அழகான காட்சிகளும் எனக்கு கிடைத்தது. இங்குள்ள கலாச்சாரம், மக்கள் மற்றும் இயற்கை சூழல் மீது நான் காதல் கொண்டுள்ளேன். என்னுடைய கனவுகளை தட்டி எழுப்பி எனது பயணத்துக்கு ஒரு நம்பிக்கையை சேர்த்துள்ளது. எனக்கு கிடைத்த அனைத்து விஷயங்களுக்கும் நான் நன்றியுடன் இருப்பேன் என கூறியுள்ளார். வெளிநாட்டு பெண்ணின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.