ஐதராபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நேற்றிரவு அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மல்லுக்கட்டின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கிளாசென் 71 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 146 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 70 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் அடித்தனர்.
9-வது லீக் ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலிலும் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில், “எனது மனைவி இந்த ஆட்டத்தை பார்க்க மும்பையிலிருந்து இங்கு (ஐதராபாத்) வந்துள்ளார். அதை விட எனக்கு வேறு என்ன வேண்டும். அவர் இங்கே இருந்ததால் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன். நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பதால் அதை தொடர்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
தொடர்ச்சியாக 4 போட்டிகளை வென்றது மிகச்சிறப்பான உணர்வை கொடுக்கிறது. ரோகித் அற்புதமாக பேட்டிங் செய்தார். அவர் என்னுடைய வேலையை எளிதாக்கினார். அவர் ரன்கள் எடுப்பது அணிக்கு ஒரு சிறந்த அறிகுறியாகும். நான் தொடர்ந்து வலைகளில் ஸ்வீப் ஷாட் அடிக்க பயிற்சிகளை எடுத்து வருகிறேன். அதை நான் ஆட்டத்திலும் தொடர விரும்புகிறேன். அதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.