காஷ்மீரில் இருந்து 118 பயணிகள் தமிழகம் திரும்பினர்: ‘தீவிரவாதிகளை நடுரோட்டில் நிற்க வைத்து சுட வேண்டும்’ என ஆவேசம்

சென்னை: காஷ்மீரில் இருந்து 118 தமிழக பயணிகள் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர். அப்போது, ‘அப்பாவி மக்களைக் கொன்ற தீவிரவாதிகளை நடுரோட்டில் நிற்க வைத்துச் சுட வேண்டும்’ என ஆவேசமாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நிகழ்த்தியதில் 27 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 145 சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்கும் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

முதல்கட்டமாக நேற்று அதிகாலை 1.30 மணி, 2.30 மணி விமானங்களில் 50 பேரும், அதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு காஷ்மீரில் இருந்து ஹைதராபாத் வழியாக சென்னை வந்த விமானத்தில் 68 பேர் என 118 பேர் சென்னை அழைத்து வரப்பட்டனர். விமான நிலையத்தில், தமிழர்நல ஆணைய அதிகாரிகள் வரவேற்று, திருச்சி, மதுரை, திருச்செங்கோடு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்த வாகனங்களில் பத்திரமாக அவர்களை அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, காஷ்மீரில் இருந்து சென்னை வந்த மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணி, செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பஹல்காமில் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, அங்கிருந்த ராணுவ அதிகாரிகள் எங்களை பத்திரமாக மீட்டு மலைக்கு கீழே அழைத்து வந்தனர். பின்னர் தமிழக அரசு அதிகாரிகள் எங்களைத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்து தேவையான உதவிகளைச் செய்தனர்.

மேலும், எங்களுடன் சுற்றுலா வந்திருந்த சந்துரு என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வும், காஷ்மீர் முதல்வரும் நேரில் சென்று நலம் விசாரித்தனர். தமிழக அரசு அதிகாரிகள் அவரை நேரடியாக சென்று கவனித்து கொண்டனர்’’ என்றார்.

மதுரையைச் சேர்ந்த ஜோதி என்ற பெண் கூறும்போது, ‘‘நாங்கள் இருந்த பகுதிக்கு 2 கி.மீ தொலைவில்தான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு பொது மக்களைக் கொன்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமாக இருந்தது. உடனே ராணுவ அதிகாரிகள் எங்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வந்தனர். அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளை நடுரோட்டில் நிற்க வைத்து சுட வேண்டும்’’ என ஆவேசமாகக் கூறினார்.

தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் வள்ளலார் கூறும்போது, ‘‘தமிழக அரசு சார்பில் உடனடியாக காஷ்மீர் சென்றவர்களைத் தொடர்பு கொண்டோம். இதுவரை 118 பேர் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வந்து, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். 2 பேர் மட்டுமே காயம் அடைந்தனர். அவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை 140 தமிழர்கள் அடையாளம் காணப்பட்டு, விமானம், ரயில் மூலம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

பஹல்காமில் தீவீரவாதிகள் தாக்குதலில் பலியான ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த
பொறியாளரின் உடல் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
அவரது உடலை கண்ட குடும்பத்தினர் கதறி அழுதனர்.
| படங்கள்: எம்.முத்துகணேஷ் |

பொறியாளர் உடலுக்கு அஞ்சலி: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 27 பேரில் ஒருவரான ஆந்திரா மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளர் மதுசூதனன் ராவின் உடல், காஷ்மீரில் இருந்து ஹைதராபாத் வழியாக நேற்று அதிகாலை சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

விமான நிலையத்தில் மதுசூதனன் ராவ் உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மதுசூதனன் ராவின் உடல் வாகனம் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

செய்தியாளார்களிடம் நயினார் நாகேந்திரன் கூறும்போது, ‘‘சுற்றுலா சென்ற பயணிகளை இந்துவா? எனக் கேட்டறிந்து சுட்டுக் கொன்றுள்ளனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி எடுத்து வருகிறார்’’ என்றார்.

செல்வப்பெருந்தகை கூறும்போது, ‘‘தீவிரவாதிகளின் இந்த செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது. பயங்கரவாதிகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட இயக்கம் காங்கிரஸ் பேரியக்கம். இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி போன்றோர் பயங்கரவாதிகளால்தான் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு இனம், மதம் என்ற அடையாளமே கிடையாது. இவ்வாறு பிளவுபடுத்தும் நடவடிக்கையை யாராக இருந்தாலும் நிறுத்த வேண்டும்’’ என்றார்.

நலம் விசாரித்த முதல்வர்: ஜம்மு-காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் பரமேஸ்வரனுக்கு அம்மாநிலத்தில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மதியம் டெல்லி வந்தடைந்த அவரை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையர் ஆஷிஷ் குமார், ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பரமேஸ்வரன் மனைவி நயன்தாராவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அவரது கணவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து, தமிழ்நாடு அரசு மூலம் தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.