மத்திய கிழக்கு நாடுகளில் பல ஆண்டுகளாக பணிபுரிந்த ராமச்சந்திரன் (68) தனது மனைவியுடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சியில் குடியேறி உள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் ராமச்சந்திரனின் மகள் ஆர்த்தி தனது குழந்தைகளுடன் சமீபத்தில் கேரளாவுக்கு வந்துள்ளார். அங்கிருந்து அனைவரும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்நிலையில் பஹல்காமில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராமச்சந்திரன் உயிரிழந்துள்ளார். இதனிடையே, காஷ்மீர் சென்றுள்ள கேரள எம்எல்ஏக்கள் ஆர்த்தியை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ சித்திக் கூறும்போது, “தனது தாய் இதய நோயாளி என்பதால், தந்தை ராமச்சந்திரன் மரண செய்தியை இதுவரை அவரிடம் சொல்லவில்லை என்று ஆர்த்தி என்னிடம் கூறினார். தாக்குதலில் காயமடைந்த தந்தை சிகிச்சை பெற்று வருவதாக தாயிடம் தெரிவித்துள்ளதாகவும் ஆர்த்தி கூறினார். ராமச்சந்திரனின் உடல் டெல்லி கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கொச்சிக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றார்.
நடந்தது என்ன? – ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.