காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் குழு என்று கருதப்படும் தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட் (டிஆர்எஃப்) பொறுப்பேற்றிருக்கிறது.
இந்தத் தாக்குதலில் தங்களுக்குப் பங்கு இல்லை என்று பாகிஸ்தான் மறுத்தாலும், தாக்குதல் நடத்திய கும்பலில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் இருந்தது தெரியவந்திருப்பதால், பாகிஸ்தானின் மறுப்பை இந்தியா ஏற்கவில்லை. இதற்கு முன் நிகழ்ந்த பயங்கரம்:
> காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது. கடந்த 2000-ம் ஆண்டில் தெற்கு காஷ்மீரின் சத்தீஸ்சிங்போராவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சீக்கியர்கள் 35 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
> அதே 2000-ம் ஆண்டில் அமர்நாத் யாத்திரை முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
> அடுத்த ஆண்டில், அதாவது 2001-ல் ஷேன்னாக் என்ற இடத்தில் 13 யாத்ரீகர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
> 2002-ம் ஆண்டு நடத்த தீவிரவாத தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
> 2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் இறந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.