சென்னை:“தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் கட்டுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய கெங்கவல்லி தொகுதி எம்.எல்.ஏ. நல்லதம்பி, “கோவிந்தம் பாளையம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசு முன்வருமா? நியாய விலை கடையில் கைரேகை மூலம் பொருட்கள் பெறப்படுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்து பேசியதாவது: “கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் விரைவில் அமைக்கப்படும். ரேஷன் கடையில் கைரேகை பதிவு மத்திய அரசின் வலியுறுத்தலில் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் 60% ஆக இருந்த நிலையில் தற்போது 99.60% ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கைரேகை பதிவில் பிரச்சினை ஏற்பட்டால் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. நகர பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கட்டுநர்கள் உள்ளதால் பொருட்கள் எளிதில் வழங்கப்படுகிறது. ஆனால் கிராமப்புறங்களில் கட்டுநர் இல்லாத காரணத்தால் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படும். கிராமப் பகுதிகளில் கட்டுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று அவர் பதில் அளித்தார்.