புதுடெல்லி: கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குஜராத் அரசு மற்றும் குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மே 6, 7-ம் தேதிகளில் தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி மற்றும் ராஜேஷ் பின்டால் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவாளி ஒருவர் சார்பில் ஆஜரான முத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவிடம், குற்றவாளிகளுக்கு எதிரான குற்றசாட்டுகளை தலைப்பு வாரியாகவும், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்கள் மற்றும் அவற்றுக்கு எதிரான வாதங்களை தொகுத்து மே 3-ம் தேதிக்கு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. அதேபோல் பிற குற்றவாளிகளும், குஜராத் அரசும் தங்களின் வாதங்களைத் தொகுத்து தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி மகேஸ்வரி கூறுகையில், “இந்த வழக்கு விசாரணைக்கு குறைந்தது இரண்டு வாரங்கள் தேவைப்படும். முதலில் மே 6 மற்றும் 7-ம் தேதிகளில் முழு நாளும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அந்த நாட்களில், குறிப்பாக நீதிமன்றத்தால் கேட்கப்படாவிட்டால் வேறு எந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்றார். தேவைப்பட்டால் இதற்கான உத்தரவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் பதிவுத்துறைக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
பின்னணி: கடந்த 2002-ம் ஆண்டு பிப். 27-ம் தேதி குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் எஸ்-6 பெட்டி தீப்பிடித்து எரிந்ததில் 59 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் பெரும் கலவரங்கள் வெடித்தன. ரயில் எரிப்பு தொடர்பான வழக்கில், 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கில் 31 பேரின் தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர் நீதிமன்றம், 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 11 பேருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று 2023 பிப்ரவரியில் குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதனிடையே, ரயில் எரிப்பு வழக்கில் தங்களின் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து குற்றவாளிகள் பலர் மேல்முறையீடு செய்துள்ளனர்.