இஸ்லாமாபாத்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம்மில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது.
அதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது. இதனால் 65 ஆண்டு கால சிந்து நதிநீர் ஒப்பந்தம் இப்போது கைவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தினால், அதனை போராகவே கருதப்படும் என்றும் சிந்து நதிநீரை நிறுத்தினால் எங்களது முழு பலத்தையும் காட்டுவோம் என்று பாகிஸ்தான் ஆரூடமாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்புக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்துத் துறைகளிலும் உறுதியான எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
மேலும் சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. போரை நிறுத்தும் வகையில் 1972ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து எல்லையில் ராணுவ படைகளை பாகிஸ்தான் குவித்து வருகிறது. முப்படைகளும் தயாராக இருக்க பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இதனால் போர் மூளும் சூழல் நிலவி உள்ளது.