பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் மக்களுக்கான விசா சேவைகளை நிறுத்தியது இந்தியா!

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு எடுத்த முடிவுகளின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு எடுத்த முடிவுகளின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவால் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து செல்லுபடியாகும் விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்படுகின்றன. பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்கள் ஏப்ரல் 29, 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

தற்போது திருத்தப்பட்டபடி, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் விசா காலாவதியாகும் முன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க இந்தியர்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் நேற்று (ஏப்.23) அறிவித்தது. அதன் விவரம்:

1. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுகிறது.

2. பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் இந்த எல்லை வழியாக மே 1-ம் தேதிக்கு முன்பாக திரும்ப வேண்டும்.

3. சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

4. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் ஒரு வாரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

5. இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்களின் பதவிகள் ரத்து செய்யப்படுகிறது.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, இரு நாட்டு எல்லையில் பெருமளவில் படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.