புதுடெல்லி: “பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டனையில் இருந்து தப்பிவிடக்கூடாது.” என்று தாக்குதலைக் கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், “பஹல்காமில் நடந்த இழிவான கொலை தாக்குதல் குறித்து நேற்று பின்னிரவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸின் மூத்த தலைவருடன் பேசினேன். இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் போகக்கூடாது. பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
துன்பங்களுக்கு மத்தியில் ஒற்றுமையுடன் செயல்படுவது காலத்தின் தேவையாகும். இந்த எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த மற்றும் உறுதியான பதிலடி கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து மத்திய அரசு அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மாநிலத்தின் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், தற்போதைய சூழல் குறித்தும் உள்துறை அமைச்சர், காஷ்மீர் முதல்வர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ராவுடன் பேசியதாக கூறியுள்ளார்.
தற்போது அமெரிக்க பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பஹல்காம் கொடூரத் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ராவுடன் பேசினேன். தற்போதைய நிலைகுறித்து விசாரித்து அறிந்து கொண்டேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதியும் முழு ஆதரவும் கிடைக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை ராகுல் காந்தி தாக்குதலைக் கண்டித்து கூறுகையில், “பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட, காயம் அடைந்தது மிகவும் வேதனையைத் தருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய வேண்டுகிறேன். ஒட்டுமொத்த நாடும் பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்கிறது.
இனிமேலும் ஜம்மு காஷ்மீரில் நிலைமை சுமுகமாக உள்ளது என்று வெறுமனே கூறுவதற்கு பதிலாக, தற்போது அரசு இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் எதிர்காலத்தில் நடக்கால் இருப்பதையும் அப்பாவி இந்தியர்களின் உயிர்கள் இதுபோல பறிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.
ஜம்மு காஷ்மீரில் நடந்தது என்ன? முன்னதாக ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் சிலரை ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் மதத்தை பயங்கரவாதிகள் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், சுற்றுலாப் பயணிகள் இங்கும், அங்கும் ஓடினர். திறந்தவெளி என்பதால், சுற்றுலாப் பயணிகளால் துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை. இந்தத் தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர்.