வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்றும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் செல்வதைத் தவிர்க்குமாறும் அமெரிக்கா பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலை 5 பேர் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. இந்திய எல்லையில் ராணுவம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய அமைப்பு பாகிஸதானைச் சேர்ந்தது என்பதாலும், தாக்குதல் நடத்தியவர்களில் பாகிஸ்தானியர்களும் அடங்கும் என்பதாலும் இந்தியா பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது என கூறப்படுகிறது.
இந்த பின்னணியில், அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு காஷ்மீருக்கோ, இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கோ செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு அரசு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புதிய பயண எச்சரிக்கையில், “ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டு வன்முறைக்கு வாய்ப்புள்ளது. எனவே, இந்த மாநிலத்திற்கு பயணம் செய்ய வேண்டாம்.
இந்தப் பகுதியில் அவ்வப்போது வன்முறை நிகழ்கிறது, மேலும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LOC) இத்தகைய வன்முறை பொதுவானது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள சுற்றுலாத் தலங்களான ஸ்ரீநகர், குல்மார்க் மற்றும் பஹல்காம் ஆகியவற்றிலும் இது நிகழ்கிறது. எனவே, அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு காஷ்மீர் செல்ல வேண்டாம். மேலும், ஆயுத மோதலுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.