ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த சூழலில், சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோட்டா நகரில் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 23 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
அந்த மாணவரின் பெயர் ரோஷன் சர்மா என்பதும், அவர் டெல்லி துக்லகாபாத் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர் கோட்டா நகரில் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். ஆனால் சமீப காலமாக ரோஷன் சர்மா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அண்மையில் அவரது பெற்றோர் கோட்டா நகருக்கு சென்று ரோஷன் சர்மாவை தங்களுடன் வந்துவிடுமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர்களுடன் செல்ல ரோஷன் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், கோட்டா நகரில் ரெயில்வே தண்டவாளம் அருகே ரோஷன் சர்மாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் அங்கு வந்து ரோஷன் சர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது கோட்டா நகரில் கடந்த 48 மணி நேரத்தில் நடந்த 2-வது தற்கொலை சம்பவமாகும்.
முன்னதாக கடந்த செவ்வாக்கிழமை பீகாரை சேர்ந்த 18 வயது மாணவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும் கோட்டா நகரில் தங்கியிருந்து போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.