பஞ்சாப்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம்மில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பெரும்பாலும், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடந்துள்ள போதிலும், அப்பாவி மக்களைக் குறிவைத்து இதுபோல தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை. இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் கூறினாலும் கூட தாக்குதலில் ஈடுபட்ட சிலர் எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் வாகா-அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்கும் நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் எல்லையை மூடுவதாக அறிவித்துள்ள நிலையில் எல்லையில் நாள்தோறும் கொடியிறக்கும் நிகழ்வில் இருநாட்டு வீரர்கள் கைகுலுக்கும் நிகழ்வுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்த நடவடிக்கை எல்லை தாண்டிய விரோதப் போக்குகள் குறித்த இந்தியாவின் தீவிர கவலையை பிரதிபலிக்கிறது, மேலும் அமைதியும் ஆத்திரமூட்டலும் இணைந்து வாழ முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானை பிரிப்பது இந்த எல்லை தான். சுற்றுலா ரீதியாகவும் இந்த எல்லை மிக முக்கியமானது. தினமும் மாலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்படும் கொடியிறக்கம் நிகழ்வை பார்க்க பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.
இது தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஒரே சாலை வழி வணிக பாதை என்பதால் இந்த எல்லை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால், பாகிஸ்தான் மிகுந்த பாதிப்பை சந்திக்க உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சமீபத்திய ஆண்டுகளில் குறைவாகவே உள்ளது, என்றாலும் இந்த மூடல் நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய ஏற்றுமதிகளுக்கு இந்திய சந்தையை நம்பியிருப்பதால் பாகிஸ்தான் இதில் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்கிறார்கள். ஏற்கனவே அந்நாடு பொருளாதார சிக்கலில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.