கோவை: “பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளரும், நடிகையுமான விந்தியா பேசினார். மேலும், ஜய்யை அரசியல் தலைவராக பார்க்கவில்லை என்று அவர் கூறினார்.
பெண்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து, கோவை மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் செஞ்சிலுவை சங்கம் அருகில் இன்று (ஏப்.24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளரும், நடிகையுமான விந்தியா பேசியது: “திமுக ஆட்சியில் தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் தொல்லையால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்கள் சாபம் பொல்லாதது. திமுக ஆட்சி இன்னும் 10 மாதம் தான். திமுகவினர் இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை பெண்களை அவமதிப்பு செய்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினால் திமுகவினரை கண்ட்ரோலாக வைத்திருக்க முடியவில்லை. அவுட் ஆப் கன்ட்ரோல் ஆகிவிட்டது. இந்தியை ஒழிப்போம் என்பவர்கள், சாராயத்தை ஒழிப்போம் என்று கூற வேண்டியது தானே. திமுகவினர் மக்களை ஏமாற்றுகின்றனர்.
சைவம், வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி கேவலமாகப் பேசி உள்ளார். ஏன் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் அவரை கட்சி பொறுப்பில் இருந்து தூக்கி விட்டோம் என்கிறார்கள். அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி வீசுங்கள். அவர் மீது வழக்கு பதிவு செய்யுங்கள். சவுக்கு சங்கர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீஸார் ஏன் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்?” என்று அவர் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா, பதவி வேண்டுமா என்பதை அவர்தான் கூற வேண்டும். சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் இல்லாத பலமான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இதுதான் அதிமுக என்பதை அனைவருக்கும் நிரூபித்து விட்டோம்.
விஜய்யை அரசியல் தலைவராக பார்க்கவில்லை. முதலில் அவர் அரசியல் களத்துக்கு வர வேண்டும். விஜய் எதை வேண்டுமானாலும் இலக்கு செய்யலாம். இது அரசியல் களத்தில் நின்று அரசியல் செய்வது மிகவும் கடினம்,” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள் கண்ணம்மாள், லீலாவதி உண்ணி, விமலா, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, முன்னாள் எம்எல்ஏ மகேஸ்வரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.