தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நேற்று ஏசி இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் தற்போது மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப் பகுதி, கண் சிகிச்சை பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவமனைக்கு தஞ்சாவூர் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கணிசமான அளவில் பெண்கள் மகப்பேறு சிகிச்சைக்கு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மருத்துவமனையில் நேற்று பகல் 11.30 மணியளவில் கர்ப்பிணி பெண்கள் அவசரகால அறுவை சிகிச்சை அரங்கம் உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் ஏசி இயந்திரத்தில் தீ விபத்து நேரிட்டது. அந்த அறையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
மருத்துவமனை பணியாளர்கள், விரைந்து செயல்பட்டு தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைத்தாலும், அக்கட்டிடம் முழுவதும் புகை சூழ்ந்திருந்து.
இதையடுத்து, முதல் மற்றும் தரை தளங்களில் சிகிச்சையில் இருந்த பச்சிளம் குழந்தைகள் உட்பட மொத்தம் 54 பேரும் உடனடியாக அருகில் இருந்த ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையத்துக்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு வீரர்கள் வந்து கட்டிடத்தின் மின் இணைப்பைத் துண்டித்து, புகை வெளியேற்றும் கருவியை இயக்கி கட்டிடத்தில் இருந்த புகையை வெளியேற்றினர்.

கட்டிடத்துக்கு தூக்கிச் சென்ற பெண்கள்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து தீ விபத்து நேரிட்ட கட்டிடத்தைப் பார்வையிட்டனர்.
பின்னர், ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் செய்தியாளர்களிடம் கூறியது: மகப்பேறு பிரிவு முதல் தளத்தில் ஏசி இயந்திரம் தீப்பற்றி, தீப்பிழம்பு கீழே விழுந்ததில் மெத்தையிலும் தீப்பற்றிக் கொண்டது. தீ விபத்து நேரிட்ட முதல் தளத்தில் இருந்த 24 பேர் மற்றும் தரை தளத்தில் இருந்தவர்கள் உட்பட கட்டிடத்தில் இருந்த 54 பேரும் பாதுகாப்பாக வேறு கட்டிடத்துக்கு இடம்மாற்றப்பட்டனர். யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ நேரிடவில்லை.
தீயை அணைக்க முயன்ற மருத்துவமனை பணியாளர்கள் 2 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர்களுக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு 2 பேரும் நலமுடன் உள்ளனர் என்றார்.
இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ச.குமார் கூறுகையில், ‘‘மருத்துவமனையில் தீ விபத்து நேரிட்ட உடன் அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். அவர்கள் சாதுரியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது’’ என்றார்.