இந்த 3 அணிகளுக்கு பிளே ஆப் கன்பார்ம்! இனி தோற்றாலும் பிரச்சினை இல்லை!

ஐபிஎல் 205 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, கிட்டத்தட்ட பாதி போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் எந்த எந்த அணிகள் பிளே ஆப்பிற்கு தகுதி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதனால் மீதமுள்ள அனைத்து போட்டிகளின் மீதும் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. ஒரு போட்டியில் தோற்றால் கூட பிளே ஆப் கனவை இழக்கும் தருவாயில் சில அணிகள் உள்ளன. அதே சமயம் சில அணிகளுக்கு இனி தோற்றாலும் கவலையில்லை என்ற நிலையில் உள்ளனர். கடந்த வாரம் வரை 10 அணிகளுக்கும் பிளே ஆப் செல்ல வாய்ப்பு இருந்து நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இந்த வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துள்ளது என்று சொல்லலாம். எனவே ஐபிஎல் 2025ல் பிளே ஆப்பிற்கு நிச்சயம் தகுதி பெறக்கூடிய மூன்று அணிகளை பற்றி பார்ப்போம்.

குஜராத் டைட்டன்ஸ்

தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். சுப்மான் கில் தலைமையிலான குஜராத் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6ல் வென்று 2 போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளனர். கடைசியாக ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியடைந்துள்ளனர். ஆஷிஷ் நெக்ராவின் தலைமையில் குஜராத் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அணியில் உள்ள டாப் ஆர்டர் வீரர்கள் மட்டும் கிட்டத்தட்ட 70% ரன்கள் அடித்து அவர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். மேலும் இந்த தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் மற்றும் அதிக ரன்கள் அடித்தவர்கள் இருவரும் குஜராத் அணியில் தான் உள்ளனர். குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ்

புள்ளி பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லி அணியும் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று 2 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். குஜராத் அணியை விட இவர்களின் நெட் ரன் ரேட் சற்று குறைவாக உள்ளதால் இரண்டாவது இடத்தில் உள்ளனர். டெல்லி அணியில் கேப்டன் அக்சர் படேலின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கேஎல் ராகுல் அவர்கள் அணியில் இணைந்தது மிகப்பெரிய பலமாக மாறி உள்ளது. மேலும் பவுலிங்கில் ஸ்டார்க் மற்றும் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். டெல்லி அணியும் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்து ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ளனர். தங்களின் சொந்த மண்ணில் விளையாடிய மூன்று போட்டிகளில் மட்டும் தோல்வி அடைந்து 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். புதிய கேப்டன் ரஜத் பட்டிதார் தலைமையில் ஆர்சிபி அணி பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசைக்க முடியாத ஒரு அணியாக உள்ளது. ஓபனிங்கில் பில் சால்ட் அதிரடி காட்ட, டெத் ஓவர்களில் ஹேசல்வுட் மற்றும் புவனேஸ்வர் குமார் சிறப்பாக வந்து வீசி வருகின்றனர். மேலும் க்ருனால் பாண்டியாவின் பந்துவீச்சை கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். இன்னும் ஒரு சில போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட ஆர்சிபி அணி பிளே ஆப் இருக்கு தகுதி பெற்று விடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.