மதுரை: கட்சி கொடி கம்பங்களை அகற்றும் உத்தரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு கோரி அக்கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை
உயர் நீதிமன்றம் கோடை விடுமுறைக்கு பிறகு தள்ளிவைத்தது.
மதுரையில் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அதிமுக நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழகத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற கெடு விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றுவதிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு அளிக்கக்கோரி அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ளது. அரசியல் கட்சியினர் தங்களது கொள்கைகளையும், அடையாளங்களையும் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்ய அரசியலமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. அரசியல் கட்சி அதற்கு சொந்தமான இடத்தில் கட்சி கொடி கம்பத்தை வைக்க யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் அரசியல் கட்சிக்கு சொந்தமான இடமாக இருப்பினும் கட்சிக் கொடி கம்பத்தை வைக்க முறையாக அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விதிகளுக்கு முரணானது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல தியாகங்களை புரிந்து மக்களின் சேவைக்காக உழைத்து வரும் சூழலில், ஏராளமான இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்களும், கட்சியின் பெயர் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகளும் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்கு முன்பாக கட்சிக்கொடிக் கம்பங்களை அகற்ற அறிவுறுத்தியுள்ளனர். போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் கட்சி கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தாலும் அவற்றையும் அகற்ற அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும் என கட்சிகளிடம் எந்த விளக்கமும் கேட்காமல், வாய்ப்பும் வழங்காமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது எங்களுக்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தும். தனி நீதிபதியின் இந்த உத்தரவு மக்களாட்சியை அச்சுறுத்தும் விதமாக உள்ளது. மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்ததாலும், அதன் பின்னர் தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இந்த மனு தாக்கல் செய்யவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே தாமதத்தை அனுமதித்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெ. நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் இன்று (ஏப்.25) விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு மீதான விசாரணையை கோடை விடுமுறைக்குப் பிறகு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.