திருவனந்தபுரம்,
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன். இவர் கொச்சியில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்துக்கு கொச்சியில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் ரூ.2.78 கோடி பண பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தீவிர மோசடி விசாரணை ஆணையம் (எஸ்.எப்.ஐ.ஓ.) விசாரணை நடத்தியது. இதில் வீணா விஜயன் மீது ஆணைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பினராயி விஜயன் மகள் மீது கொச்சி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். அதில், 2 நிறுவனங்கள் இடையே உள்ள பண பரிமாற்றம் பண சலவை குற்றப் பிரிவில் வருவதாகவும், இதற்கு முக்கிய மூளையாக செயல்பட்டது வீணா விஜயன் என்று கூறப்பட்டு உள்ளது. ஒரு நிறுவனம் தொடங்கிய பின்னர் வளர்ச்சி இல்லாமல் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதனால் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.66 லட்சம் இழப்பு ஏற்பட்டது.
பின்னர் 2 நிறுவனங்களும் தொடர்பு கொண்ட பின்னர், கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மாதத்துக்கு ரூ.5 லட்சம் வீதம் வீணா விஜயனின் நிறுவனத்துக்கு எந்த சேவையும் புரியாமல் வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர வீணா விஜயன் பெயரில் மாதத்துக்கு ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள கேரள ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.