MS Dhoni Records : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பல சரித்திர சாதனைகளை படைத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியிலும் இன்னொரு சாதனை படைத்துள்ளார். எஸ்ஆர்ஹெச் அணிக்கு எதிராக தோனி களமிறங்குவது அவருடைய 400வது டி20 போட்டி ஆகும். இது டி20 வரலாற்றில் சரித்திர சாதனையாகும். இந்த மைல் கல்லை எட்டிய நான்காவது இந்திய கிரிக்கெட் பிளேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் எம்எஸ் தோனி. தோனிக்கு முன்பு, ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் மற்றும் விராட் கோலி இந்த சாதனையை படைத்துள்ளனர்.
400 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள்
ரோஹித் சர்மா: 456
தினேஷ் கார்த்திக்: 412
விராட் கோலி: 408
எம்எஸ் தோனி: 400
எம்எஸ் தோனியின் டி20 சாதனை
400வது டி20 போட்டியில் விளையாடும் எம்எஸ் தோனி 136 ஸ்ட்ரைக் ரேட்டில் 7,566 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் இந்த பார்மேட்டில் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், கேப்டன் என பல சரித்திர சாதனைகளையும் தோனி தன் பெயரில் வைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையும் தோனி வசமே இருக்கிறது. அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதற்குப் பிறகும் 4 முறை சாம்பியன் பட்டம் எம்எஸ் தோனி தலைமையில் சிஎஸ்கே வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையையும் வைத்திருக்கிறது.
தோனி மீண்டும் கேப்டன்
தோனியைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வு பெற்றுவிடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டே இருக்கிறார். அத்துடன் அவரே விரும்பி சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை மற்ற பிளேயர்களிடம் ஒப்படைத்தாலும் அந்த கேப்டன்சி பொறுப்பு அவரை விடுவதாக இல்லை. ஏனென்றால் ஜடேஜா சிஎஸ்கே கேப்டனாக நியமிக்கப்பட்டபோது சில வாரங்களிலேயே அந்த கேப்டன் பொறுப்பு தோனி வசம் வந்தது. இப்போது ருதுராஜ் சிஎஸ்கே கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு மீண்டும் எம்எஸ் தோனி வசம் வந்துள்ளது.
சிஎஸ்கே பிளே ஆப் செல்லுமா?
இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் பிளேஆப் செல்வதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு. இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது. தோனியும் பிரஸ்மீட்டில் இதையே தெரிவித்தார். இந்தமுறை சிறப்பாக ஆடவில்லை என்றால் அடுத்த ஐபிஎல் போட்டியில் மிகவும் வலுவான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் திரும்ப வரும் என எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.