ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக அந்த நாட்டுடன் செய்துகொண்ட சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் பாகிஸ்தானுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னாள் தலைவர் குஷ்விந்தர் வோரா கூறியதாவது:
ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதால் பாகிஸ்தானை பாதிக்கும் எந்தவொரு தகவலையும் இந்தியா இனி பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சிந்து நதி அமைப்புக்குட்பட்ட ஆறுகளில் நீர்த்தேக்க அளவு மற்றும் நீரோட்டம் குறித்த தகவல்களை பாகிஸ்தானுடன் இந்திய அரசு இனி பகிர்ந்து கொள்ளாது. பருவநிலை காலத்தில் சிந்து நதிகளில் ஏற்படும் வெள்ளம் குறித்த தகவலை பாகிஸ்தானுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்வதும் இனி நிறுத்தப்படும்.
பாகிஸ்தானின் நிலைப்பாடு தொடர்ந்து எதிர்மறையாகவே இருந்தால் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்யலாம்.
இதற்கிடையில், சிந்து நதி அமைப்புக்குள் நீர் சேமிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் இந்தியா ஈடுபடலாம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
ஒப்பந்தம் என்ன சொல்கிறது? – இந்தியாவும் பாகிஸ்தானும் 9 வருட பேச்சுவார்த்தைக்கு பிறகு, 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உலக வங்கியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இரு நாட்டு எல்லையில் பாயும் நதிகளின் நீரைப் பயன்படுத்துவதில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான வழிமுறையை இந்த ஒப்பந்தம் வகுத்துள்ளது.
ஆறு பொது நதிகளை நிர்வகிப்பது தொடர்பான இந்த ஒப்பந்தத்தில், சட்லெட், பியாஸ், ராவி ஆகிய கிழக்கு ஆறுகளின் அனைத்து நீரும் இந்தியாவின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு ஆறுகளின் நீரின் பெரும் பகுதி பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்கு ஆறுகளில் நீர்மின்சாரம் தயாரிக்கும் உரிமை இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இத்திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டது.
மேற்கு நதிகளில் இந்திய நீர்மின் திட்டங்களின் வடிவமைப்பு குறித்து ஆட்சேபனை எழுப்பும் உரிமை பாகிஸ்தானுக்கு தரப்பட்டுள்ளது.
இரு நாட்டு ஆணையர்களும் ஆண்டுக்கு ஒரு முறையாவது, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மாறி மாறி சந்திக்க வேண்டும் என்று ஒப்பந்தம் கூறுகிறது.