கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து காக்கும் வகையில், சென்னை அண்ணா சாலை உட்பட பல்வேறு முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் பசுமை நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
ஆனால், இப்படி போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை நிழல் பந்தல்கள் சில, காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்களை மறைந்தபடி உள்ளன. குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் அண்ணாசாலையில் பெரியார் சிலை அருகே உள்ள பசுமை பந்தல், ஸ்பென்சர் பிளாசா சிக்னல் அருகில் போடப்பட்ட பசுமை பந்தல் உட்பட மேலும் சில பசுமை பந்தல்கள் சிசிடிவி கேமராக்களை மறைத்தபடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் பெரும்பாலான குற்றங்கள், போக்குவரத்து விதி மீறல்கள் சிசிடிவி கேமராக்கள் மூலமே கண்டுபிடிக்கப்படுகிறது. மேலும், தற்போது ஏஐ தொழில்நுட்பம் மூலம் இயங்கும் நவீன கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் குற்றவாளிகள் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், பசுமை பந்தல்களால் கேமராக்கள் மறைக்கப்பட்டுள்ளது. எனவே, சிசிடிவி கேமராக்களை மறைக்காத வகையில் பசுமை பந்தல்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறும்போது, சிசிடிவி கேமராக்கள், சாலை விதிகளை கண்டிப்புடன் அமல் செய்வதற்கும், பல்வேறு வழக்குகளில் துப்புத் துலக்குவதற்கும் மிக அவசியமாக உள்ளன. அதிநவீன கேமராக்கள் கூட பொருத்தப்பட்டுள்ளன. எனவே, கேமராக்களை மறைக்காத வகையில் பந்தல்களை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தன.