தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் 50 புதிய ஆதார் பதிவு மையங்கள்: அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் 50 புதிய ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று தகவல் தொழில்நுட்ப துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார். புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அவர் பேசியதாவது:

தமிழக அரசுத் துறைகள் டிஜிட்டல்மயம் ஆக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 41 லட்சம் கோப்புகள் டிஜிட்டல்மயம் ஆக்கப்பட்டுள்ளன. சுமார் 1.50 லட்சம் அரசு ஊழியர்கள் காகித பயன்பாடின்றி டிஜிட்டலில் கோப்புகளை கையாள்கின்றனர். சென்னையில் 1,869 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் இடங்களில் இலவச வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் மூலம் தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.

இ-சேவை மையங்கள் மூலம் மக்களுக்கு அரசின் பல்வேறு சேவைகள் எளிதில் கிடைக்கின்றன. முன்பு 7 ஆயிரம் இ-சேவை மையங்கள் இருந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் இ-சேவை மையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் கடந்த ஆண்டு சுமார் 1.20 கோடி பேர் பயன்பெற்றனர். கிராமப்புறங்களில் 2 கி.மீ.க்கு ஒரு மையம், நகர்ப்புறத்தில் ஒரு கி.மீ.க்கு ஒரு மையம் இருக்க வேண்டும் என்பது அரசின் இலக்கு. இ-சேவை மையம் தொடங்க எளிதில் அனுமதி அளிக்கப்படுகிறது. மக்கள் இ-சேவை மையம் மூலம் பேருந்துகளுக்கு டிக்கெட் பெறும் புதிய திட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

புதிய அறிவிப்புகள்: ஆதார் சேவைகளை மக்கள் எளிதாக பெற, தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் புதிதாக 50 ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்படும். இ-சேவை மற்றும் பிற துறைகளின் சேவைகளை வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒருங்கிணைந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதில் முதல்கட்டமாக ரூ.3.85 கோடி செலவில் 50 சேவைகள் வழங்கப்படும்.

அரசு திட்டங்களில் வெளிப்படை தன்மையை மேம்படுத்தவும், பயனாளிகளின் அடையாளத்தை சரிபார்க்கவும் இ-கேஒய்சி கைபேசி செயலி மற்றும் இணையதளம் தொடங்கப்படும். முதியோர் ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டங்களில் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.

தமிழ் இலக்கியம், மொழியியல் பயிலும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின்கீழ் தமிழ் இணையக் கல்வி கழகம் மூலம் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். ஆழ்நிலை தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்பு வடிவமைப்பு மேம்பாட்டுக்கு உதவும் வகையில் அரசு, தனியார் துறை பங்களிப்பில் ஒரு புத்தொழில் (ஸ்டார்ட்-அப்) நிறுவனத்துக்கு 7.5 சதவீதம் மானியம் என்ற அளவில் அதிகபட்சம் ரூ.15 லட்சம் மானியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.