திறப்பு விழாவுக்கு தயாராகும் திருவிடந்தை திருமண மண்டபம்: உள்ளூர் மக்களுக்கு கட்டண சலுகை தர கோரிக்கை

திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில் முகப்பு பகுதியில் ரூ.4.30 கோடி மதிப்பில் புதிய திருமண மண்டபம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் 80% நிறைவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் நிலையில், உள்ளூர் மக்கள் மற்றும் மீனவர்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் அமைந்துள்ள நித்திய கல்யாண பெருமாள் கோயில் அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது.

இக்கோயிலில், சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். இதனால், பக்தர்களின் அடிப் படை வசதிகளுக்காக அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈசிஆர் சாலையையொட்டி உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் திருமண மண்டபம் அமைக்க தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு ரூ.4.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இதன்பேரில், திருமண மண்டபத்தின் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருமண மண்டபத்தில் 350 பேர் அமரும் வகையிலும், 12 அறைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் 2 தளங்களாக திருமண மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது, திருமண மண்டபத்தின் கட்டுமான பணிகள் 80% நிறைவு பெற்றுள்ளது.

இந்த, திருமண மண்டபத்தின் கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் கடற்கரையோர கிராம மக்கள் தங்களின் குடும்பங்களில் நடைபெறும் இல்ல சுபநிகழ்ச்சிகளை குறைந்த அளவிலான கட்டணம் செலுத்தி, மேற்கண்ட திருமண மண்டபத்தில் நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். அதனால், மீனவ மக்கள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களை கருத்தில் கொண்டு திருமண மண்டபத்துக்கு குறைந்த அளவில் கட்டணம் நிர்ணயம் செய்ய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கடற்கரையோர கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் கூறியதாவது: கடற்கரையோரத்தில் உள்ள திருமண மண்டபங்களை வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற அளவுக்கு கட்டணங்கள் உள்ளன. இதனால், பல கி.மீ. தொலைவில் உள்ள திருமண மண்டபங்களை நாடி செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம்.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் நித்திய கல்யாண பெருமாள் கோயில் நிலத்தில் திருமண மண்டபம்
கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படும் நிலையில் உள்ளது. அதனால், உள்ளூர் மற்றும் மீனவ மக்களை கருத்தில் கொண்டு குறைந்த அளவில் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் அல்லது உள்ளூர் மக்களுக்கு கட்டண சலுகை அளிக்க தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.