சென்னை: பகுதி நேர ஆசிரியர்கள் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று செங்கோட்டையனுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழகத்தில் தனியார் கல்லூரிகள் உருவாகவும், பியுசி நடைமுறை மாறி பிளஸ் 1, பிளஸ் 2 முறை வந்ததற்கும் முழு காரணம் எம்ஜிஆர்தான். அதிமுக ஆட்சியில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை 59 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது உயர்கல்வி மாணவர் சேர்க்கை என்பது 47 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எவ்வாறு உயர்ந்துள்ளது என்பதை விளக்க வேண்டும். பொதுவாக மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையானது குறைந்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு 66,49,466 மாணவர்கள் இருந்த நிலையில், இப்போது 58,17,858 பேர் படிப்பதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக ஆட்சியில் அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அப்போதைய முதல்வர் தொடங்கி வைத்தார்.
2019-20ம் ஆண்டுகளில் 2,842 பள்ளிகளில் தொடங்கப்பட்ட இந்த வகுப்புகளில் முதல்கட்டமாக 42,599 பேர் சேர்ந்தனர். 2-ம் கட்டமாக 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சேர்ந்தனர். இதன்மூலம், தனியார் பள்ளிகளைவிட அதிகளவில் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்தனர்.
ஆனால், தற்போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் குறைந்த மாணவர்களே உள்ளனர். இதை அரசு மேம்படுத்த வேண்டும். பள்ளிகளை தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்து மாணவர்களின் மன உளைச்சலை போக்க வேண்டும். அதிமுக ஆட்சியில், ரூ.5,831.13 கோடி செலவி்ல் பள்ளி கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டன.
காலி பணியிடங்கள்: அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் சிஎஸ்ஆர் நிதி ரூ.527 கோடி பெறப்பட்டு அதன்மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆசிரியர்களை பொறுத்தவரை 2011-21 வரையில் 58,472 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த ஆட்சியில், தற்காலிக ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள்தான் அதிகளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கரோனா காலத்தில் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்துகின்றனர்.
நீட்தேர்வுக்கு மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவப்படிப்பில் சேர்ந்தனர். ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நீங்கள் தேர்வு செய்யுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்து அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை அளவு என்பது 47 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பதே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் 3,088 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டு 1,915 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பட்டாதாரி ஆசிரியர்கள் 3,088 பேர் தேர்வுக்கான பணிகள் நடைபெற்ற நிலையில் நீதிமன்ற வழக்கு காரணமாக தடைபட்டுள்ளது. சாதகமான தீர்ப்பை பெற்று அவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் 11 ஆண்டுகளாக தேர்வு செய்யப்படாத நிலையில் 2,868 பேர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றுள்ளது. மேலும், 1,705 பட்டாதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கடந்த ஏப்.23-ம் தேதி காலை வரை தமிழக அரசுப்பள்ளிகளில் புதிதாக 1,56,290 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தேவைக்கேற்ப புதிதாக தேர்வு மையங்கள் ஏற்படுத்தி வருகிறோம். அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.7,500 கோடி ஒதுக்கப்பட்டு, இதுவரை ரூ.3,527.05 கோடியில் 8,306 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தொடர்ந்து, 4,412 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இந்தாண்டுக்கு இத்திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிஎஸ்ஆர் நிதி இதுரை ரூ.658.87 கோடி பெறப்பட்டு 12,503 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்வி டிவியானது தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் நாங்கள் சட்டப்பேராட்டம் நடத்தி விலக்கு பொறுவதற்காக தொடர்ந்து போராடுவோம். பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்பாக முதல்வர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பழனிசாமி – செங்கோட்டையன்: அதிமுகவில் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் நிலை நீடித்து வருவதாக கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று பேரவையில் பேசிய செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவரின் நல்லாட்சியில் என்று அவரது ஆட்சிக் காலத்தை பெருமையாக பேசினார். ஆனால், பழனிசாமி பெயரை பயன்படுத்தவில்லை. அதேநேரம், கூடுதலாக பேச நேரம் கேட்டபோது, செங்கோட்டையனுக்காக பேரவைத் தலைவர் அப்பாவுவிடம், பழனிசாமி பரிந்துரைத்தார்.