ஸ்ரீநகர்: காஷ்மீரின் பஹல்காமில் பங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மக்களவை எதிர்க்கட்சிகள் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவை அவரது இல்லத்தில் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் புல்வெளியில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை ஸ்ரீநகர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இது ஒரு பயங்கரமான சோகம். என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளவும், உதவி செய்வதற்காகவும் நான் இங்கே வந்துள்ளேன். ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் மக்களும் இந்த தாக்குதலைக் கண்டித்ததுடன், இந்த நேரத்தில் தேசத்துடன் ஒற்றுமையாக நின்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஒருவரை நான் இன்று சந்தித்தேன். இந்தத் தாக்குதலில் தங்களின் குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு எனது அன்பினையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். முழு தேசமும் ஒற்றுமையாக நிற்கிறது. நேற்று அரசுடன் நாங்கள் ஒரு கூட்டம் நடத்தினோம். அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். சமூகத்தை பிளவுபடுத்துவதே இந்தத் தாக்குதலுக்கு பின்னுள்ள ஒரே நோக்கம். பயங்கரவாதிகள் நடத்த விரும்பியதை தோற்கடிப்பதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள எனது சகோதர சகோதரிகளை, யாரோ சிலர் தாக்குவதைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன். இந்த தீயச் செயல்களுக்கு எதிராக போராடுவதும், பயங்கரவாதத்தை முற்றிலும் தோற்கடிப்பதும் மிகவும் முக்கியம். நான் முதல்வர் உமர் அப்துல்லாவையும், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவையும் சந்தித்தேன் அவர்கள் என்ன நடந்தது என்று எனக்கு விளக்கினார்கள். நானும் எனது கட்சியும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று இருவரிடமும் உறுதி அளித்திருக்கிறேன்” என்று ராகுல் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாவை அவரது இல்லத்திலும், துணை நிலை ஆளுநரை ஆளுநர் மாளிகையிலும் சந்தித்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், காங்கிரஸ் எம்எல்ஏகள் குலாம் அகமது மிர் மற்றும் தாரிக் ஹமீது கரா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் சையது நசீர் ஹுசைன் ஆகியோர் இருந்தனர். தொடர்ந்து ஸ்ரீநகர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்தவர்களையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் ராகுல் காந்தி சந்தித்தார்.
எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகள்: முன்னதாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது தொடர்பாக டெல்லியில் வியாழக்கிழமை அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின.
‘சுற்றுலா தலமான பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன்?’ என்ற முக்கியக் கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இதற்கு மத்திய உள்துறை மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் அளித்த விளக்கத்தில், ‘வரும் ஜூலை 3-ம் தேதி புனித அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட உள்ளது. அப்போது பஹல்காம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.
பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்ல பாதுகாப்புப் படை தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. உள்ளூர் நிர்வாகம் தன்னிச்சையாக பைசரன் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கி உள்ளது. பாதுகாப்புப் படைகளிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால், அந்தப் பகுதியில் வீரர்களை பணியில் அமர்த்தி இருப்போம்.
பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் குறித்து தகவல் அறிந்த 20 நிமிடங்களுக்குள் அங்கு பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து சென்றனர். எனினும் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததை ஒப்புக் கொள்கிறோம். காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள், அரசு ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது வழக்கம். முதல் முறையாக சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதை எதிர்பார்க்கவில்லை’ என்று அவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்.28-ல் பேரவைக் கூட்டம்: இதனிடையே, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஷ் சின்ஹா வெளியிட்ட உத்தரவில், ‘ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019, பிரிவு 18(1)-ன் அதிகாரத்தை பயன்படுத்தி ஜம்மு – காஷ்மீர் சிறப்பு பேரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. வரும் திங்கட்கிழமை (ஏப்.28) காலை 10.30 மணிக்கு பேரவை கூடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிந்தைய நிலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.