புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 2 லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் குண்டுவீசி அழித்தனர். அந்த வீடுகளுக்குள் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது.
இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளான அடில் உசேன் தோக்கர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகிய இருவரின் வீடுகள் ஜம்மு காஷ்மீரில் நடந்த தனித்தனி குண்டுவெடிப்புகளில் வியாழக்கிழமை இரவு அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களின் வீடுகளுக்குள் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அடில் உசேன் தோக்கர் அனந்த்நாக் மாவட்டத்தையும், ஆசிப் ஷேக் புல்வாமாவையும் சேர்ந்தவர்கள். ஹாஷிம் மூசா என்கிற சுலேமான் மற்றும் அலி பாய் என்கிற தல்ஹா பாய் ஆகியோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.