புதுடெல்லி: “நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட சென்றடையாது என்பதை உறுதி செய்வோம்” என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.
ஜம்மு – காஷ்மீரின்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி பயங்கரவாதக் குழு ஒன்று தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு, இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, இந்தியா – பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி – வாகா சோதனைச் சாவடி மூடல் முதலான முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான், இந்த செயலை போர் தொடுத்ததாகவே கருதுவோம் என தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவுக்கான வான்பரப்பு மூடப்படுவதாக தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை நடத்திய முக்கிய கூட்டத்தில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் கூறும்போது, “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பில் ஒரு செயல் திட்டம் இறுதி செய்யப்பட்டது.
இந்தச் சந்திப்பின்போது, மூன்று வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒரு சொட்டு தண்ணீர் கூட பாகிஸ்தானுக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளில் அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. விரைவில், நதிகளில் தண்ணீரை திருப்பிவிடுவதற்கு உரிய பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
ஒப்பந்தமும் தாக்கமும் – இந்தியா – பாகிஸ்தான் இடையே 9 ஆண்டுகள் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, 1960-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாட்டு எல்லையில் பாயும் நதிகளின் நீரைப் பயன்படுத்துவதில் இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
6 பொது நதிகளை நிர்வகிப்பது தொடர்பான இந்த ஒப்பந்தத்தில் சட்லெட், பியாஸ், ராவி ஆகிய கிழக்கு ஆறுகளின் அனைத்து நீரும் இந்தியாவின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு ஆறுகளின் நீரின் பெரும் பகுதி பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்கு ஆறுகளில் நீர் மின்சாரம் தயாரிக்கும் உரிமை இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டால், அது பாகிஸ்தானில் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். குடிநீர் பஞ்சத்தோடு, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். இதுதான் பாகிஸ்தானுக்கான மிகப் பெரிய தண்டனையாக இருக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். இது தவிர, சாலை எல்லைகளை இந்திய அரசு மூடியுள்ளது. இது பாகிஸ்தான் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரித்துள்ளது. தூதரக ரீதியாகவும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்து ரீதியாக பாகிஸ்தான் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது.
மாநில முதல்வர்களுக்கு அமித் ஷா ‘அலர்ட்’ – இதனிடையே, நாட்டின் அனைத்து மாநில முதல்வர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை தொலைபேசியில் உரையாடினார். அப்போது, தங்களது மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது விசாக்களை ரத்து செய்து திருப்பி அனுப்புமாறு மாநில முதல்வர்களிடம் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.