பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 70 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் துருவ் ஜுரெல் 47 ரன் எடுத்தார். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டும், க்ருனால் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் பெங்களூரு வீரர் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது,
எங்களுக்கு டாஸ் வெல்வதுதான் மிகவும் சவாலான காரியமாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து மூன்று ஆட்டங்கள் எங்கள் சொந்த மைதானத்தில் தோல்வி கண்டோம். பேட்டிங் செய்வதில் நாங்கள் இன்னும் சிறப்பாக என்ன செய்யலாம் என்று விவாதித்தோம். நாங்கள் பேட்டிங் செய்யும் போது ஆடுகளம் சிறப்பாக இல்லை.
ராஜஸ்தான் பேட்டிங் செய்யும்பொழுது பனிப்பொழிவு வந்து ஆடுகளத்தை சிறப்பாக மாற்றியது. இப்போது எங்களுடைய திட்டம் எளிமையாக மாறிவிட்டது. எங்களுடைய ஒரு வீரர் தொடர்ந்து விளையாடுவார். மீதமுள்ளவர்கள் அவரைச் சுற்றி அதிரடியாக விளையாட வேண்டும் அவ்வளவுதான்.
சால்ட் அவருடைய பாணியில் விளையாடினார். எனக்கும், படிக்கலுக்கும் இந்த மைதானம் நல்ல முறையில் தெரியும். எனவே, நாங்கள் பந்தை டைமிங் செய்ய முடிவு செய்தோம். மேலும், பவுண்டரிகள் அடித்து எதிரணி மீது அழுத்தத்தை வைத்திருந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.