Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று (ஏப். 25) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேப்பாக்கத்தில் சந்திக்கிறது. லீக் சுற்று தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், பிளே ஆப் சுற்றுக்கான ரேஸில் இருந்து இனி ஒவ்வொரு அணிகளாக வெளியேறத் தொடங்கும் எனலாம்.
Chennai Super Kings: புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா சிஎஸ்கே!
தற்போது ராஜஸ்தான் அணி 9 போட்டிகளை விளையாடி 2இல் மட்டுமே வென்றுள்ளது. இனி உள்ள 5 போட்டிகளில் வென்றாலும் அந்த அணியால் தகுதிபெற இயலாது எனலாம். அதிகாரப்பூர்வமற்ற வகையில், ராஜஸ்தான் அணிதான் முதல் அணியாக வெளியேறியிருக்கிறது எனலாம். அதேபோல், இன்று நடைபெறும் போட்டியில் தோல்வியை தழுவும் அணி ராஜஸ்தான் உடன் சேர்ந்து தொடரில் இருந்து வெளியேறும்.
புள்ளிப்பட்டியலில் தற்போது குஜராத், டெல்லி, ஆர்சிபி, மும்பை ஆகிய அணிகள் டாப் 4 இடத்தை பிடித்துள்ளன. பஞ்சாப், லக்னோ, கொல்கத்தா அணிகள் முறையே அடுத்த 3 இடங்களில் உள்ளன. இன்று சிஎஸ்கேவோ, ஹைதராபாத்தோ வென்றால் 8ம் இடத்திற்கு முன்னேறும். அதிக நெட் ரன்ரேட் உடன் வென்றால் மட்டுமே 7ம் இடத்திற்கு முன்னேறும்.
Chennai Super Kings: பயிற்சியில் மிரட்டிய சிஎஸ்கே பேட்டர்கள்
சிஎஸ்கேவின் பிளே ஆப் கனவை பொறுத்தவரை, இனி உள்ள 6 போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால், சிஎஸ்கே அணி வீரர்கள் தொடர்ந்து சேப்பாக்கத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சிஎஸ்கே அணி வீரர்கள் அவர்களின் பேட்டிங் ஆர்டரின் வரிசையில் பயிற்சியில் ஈடுபட்டனர். ரச்சின் ரவீந்திரா – ஷேக் ரஷீத் ஜோடி இரவில் முதலில் பயிற்சியை தொடங்கியது. அதன்பின் ஆயுஷ் மாத்ரே – ஜடேஜா ஜோடி அடுத்து பயிற்சி மேற்கொண்டது.
வன்ஷ் பேடி, விஜய் சங்கர், ஓவர்டன், டிவால்ட் பிரேவிஸ் வீரர்களும் த்ரோடவுண்களை வைத்து பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டனர். பெரும்பாலும் இடதுகை ஸ்பின்னர்களையும், லெக் ஸ்பின்னர்களையும் பேட்டர்கள் விளையாடினார்கள். ஷ்ரேயாஸ் கோபால், டிவால்ட் பிரேவிஸ் உள்ளிட்டோர் சுழற்பந்துவீச்சும் போட்டார்கள். பேட்டிங்கிற்கு முன்னதாக பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி நடந்ததாக தெரிகிறது. தோனி, அஸ்வின், தூபே மட்டும் நேற்று பேட்டிங் பயிற்சியில் ஈடுபடவில்லை.
Chennai Super Kings: வன்ஷ் பேடிக்கு வாய்ப்பிருக்கா?
இந்நிலையில், நேற்று வன்ஷ் பேடி பயிற்சியில் பலரின் கவனத்தையும் கவர்ந்தார். தூரத்தில் இருந்து பார்க்க உயரம் குறைவாக தெரிந்த அவர் பல சிக்ஸரையும், பவுண்டரியையும் பறக்கவிட்டார். ஃபைன் லெக் திசையில் அடித்த சிக்ஸர்கள் குறிப்பிடத்தக்கது. வலது கை ரிஷப் பண்ட் போல் நேற்று பேட்டிங் செய்தார்.
ஒருவேளை நாளை தூபேவை பேட்டிங் பிளேயிங் லெவனில் வைத்துக்கொண்டு, சூழலுக்கு தகுந்தவாறு வன்ஷ் பேடியையோ, விஜய் சங்கரையோ இம்பாக்ட் வீரராக களமிறக்கலாம். இதனால், அஸ்வினையும் பிளேயிங் லெவனில் வைத்துக்கொள்ளலாம். அஸ்வின் வேண்டாம் என்றால் வன்ஷ் பேடியை நிச்சயம் களமிறக்கலாம்.
சிஎஸ்கே பிளேயிங் லெவன் கணிப்பு
ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் தூபே, ஜடேஜா, தோனி, அஸ்வின், நூர் அகமது, அன்ஷூல் கம்போஜ், கலீல் அகமது. இம்பாக்ட் வீரர்: பதிரானா.