CSK vs SRH: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 43வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் ஐபிஎல் 2025 புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் சிஎஸ்கே இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறியது. பிளே ஆப் வாய்ப்பை பொறுத்தவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 99 விழுக்காடு பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. இருப்பினும் இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. அது என்னவென்றால் இனி வரும் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று, ரன்ரேட்டும் சிறப்பாக இருந்து, பிற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் செல்ல முடியும்.
தோனி ரியாக்ஷன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்குப் பிறகு பேசிய எம்எஸ் தோனி, அணியின் பேட்டிங் எதிர்பார்த்தளவுக்கு இல்லை. பேட்டிங் சிறப்பாக இருந்து இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் எடுத்திருந்தால் இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கலாம். மிடில் ஆர்டரில் டெவால்டு ப்ரெவிஸ் சிறப்பாக ஆடினார். அவரைப் போன்று ஆடுவதற்கான பிளேயர்களையே நான் தனிப்பட்ட முறையில் எதிர்பார்க்கிறேன். ஆனால், அது வொர்க்அவுட் ஆகவில்லை. ஒன்றிரண்டு பிளேயர்கள் சிறப்பாக ஆடவில்லை என்றால் பரவாயில்லை, பெரும்பான்மையான பிளேயர்களின் ஆட்டம் எதிர்பார்த்தளவுக்கு இல்லாதபோது முடிவுகள் இப்படி தான் இருக்கும் என தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வாய்ப்பு
ஏற்கனவே கூறியதுபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பிளே ஆப் வாய்ப்பு என்பது கிட்டதட்ட முடிந்துவிட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இன்னும் நூலிழை வாய்ப்பு இருக்கிறது. ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். தோனி கடந்த போட்டியில் தோல்வியடைந்த பிறகு பேசியபோதே இதனை கூறிவிட்டார். இந்த ஆண்டு இல்லை என்றால் அடுத்த ஆண்டு வலுவான அணியாக திரும்ப வருவோம் என்று, அதனையே இன்றும் கூறினார்.
சிஎஸ்கே – சன்ரைசர்ஸ் மேட்ச்
டாஸ் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் எடுத்தது. இன்றைய போட்டியில் முதன்முறையாக சிஎஸ்கே அணிக்கு களமிறங்கிய டெவால்ட் ப்ரெவிஸ் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். ஆயுஷ் மகாத்ரே 30 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. சேஸிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 ரன்களும், கமிந்து மென்டிஸ் 32 ரன்களும் எடுத்து சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினர்.