RCB தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்… பிளமிங் பேச்சு – உற்றுநோக்கும் CSK ரசிகர்கள்

CSK vs SRH: நடப்பு 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று (ஏப். 25) சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதையொட்டி, சிஎஸ்கே அணி வீரர்கள் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இரவு மும்பைக்கு எதிரான போட்டி முடிந்து நேற்றுதான் ஹைதராபாத் அணி சென்னை வந்தடைந்தது என்பதால் அந்த அணி வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை.

CSK vs SRH: அனுபவ வீரர்களையே அதிகம் நம்புகிறோம்

இதைத் தொடர்ந்து, சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் (Stephen Fleming) மட்டும் நேற்று (ஏப். 24) மாலை செய்தியாளர்களை சந்தித்து, அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில், சிஎஸ்கே அணி இளம் வீரர்களை தற்போது பயன்படுத்த தொடங்கியிருக்கிறது, இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு,”இளம் வீரர்கள் குறித்து நீங்கள் கேட்டீர்கள். நாங்கள் முதலில் இளம் வீரர்களை கண்டடைய வேண்டும். ஆனால் மறுமுனையில், நடப்பு சீசனின் அதிக ரன்களை குவித்த டாப் 20 வீரர்களை பார்த்தீர்கள் என்றால் அதில் எத்தனை இளம் வீரர்கள் இருக்கிறார்கள்…? ஒன்றிரண்டு பேர் மட்டுமே அதில் அதிகபட்சமாக இருப்பார்கள்.

CSK vs SRH: வயது இல்லை… இதுவே முக்கியம்

திறமையான வீரர்களை எனக்கும்தான் பிடிக்கும். கடந்த 2-3 சீசன்களாக அச்சமின்றி ஆடும் வீரர்களுக்கான ஆட்டமாக இந்த தொடர் மாறியிருப்பதையும் நான் கவனிக்கிறேன். ஆனால், நாங்கள் அனுபவ வீரர்களையே அதிகம் நம்பியிருக்கிறோம். இளம் வீரர்களால் ஒரே பாணியில்தான் ஆட முடிகிறது. ஆனால், அனுபவ வீரர்களால் போட்டியின் சூழலை புரிந்து பல்வேறு விதங்களில் விளையாட முடியும்.
 
திறன் வாய்ந்த இளம் வீரர்கள், அனுபவம் வாய்ந்த வீரர்கள் இரண்டு தரப்புக்கும் இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். கடினமான அழுத்தம் நிறைந்த சூழல்களில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள்தான் எனக்கு தேவை. அப்படிப்பட்ட வீரர்களின் வயதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஆயுஷ் மாத்ரே விளையாடிய விதம் எங்களுக்கு வியப்பை அளித்தது” என்றார்.

CSK vs SRH: பதில் கேள்வி கேட்ட பிளமிங்

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் அதிகமாக ரன்கள் அடிப்பதில்லையே. என்ன காரணம்? என நமது ஜீ தமிழ் நியூஸ் நிரூபர் சிவராமன் கேட்ட கேள்விக்கு பிளெமிங், ‘டாப் ஆர்டர் மட்டும் ரன் அடிக்கிறார்களா?’ என்ற தொனியில் பதில் கேள்வியை கேட்டார். தொடர்ந்து அந்த கேள்வி குறித்து பேசிய அவர், “எங்களுக்கு டாப் ஆர்டரில் மொமண்டமே அமையவில்லை. டாப் ஆர்டரில் இருந்து 75 ரன்களுக்கு மேல் வந்தால்தான் பேட்டர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆர்டர்களில் களமிறங்குவார்கள். நல்ல தொடக்கமே அமையாதபோது, அத்தனை வீரர்களின் இடமும் மாறுகிறது. அதுதான் சிக்கல்’ என்றார்.

CSK vs SRH: ஆர்சிபி அணி தான் இன்ஸ்பிரேஷன்

பிளே ஆப் சுற்று குறித்து பேசிய பிளமிங், ”பிளே ஆப் சுற்றுக்கு செல்ல ஆர்சிபி தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன். அடுத்து வரும் 6 போட்டிகளையும் வென்று ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்வோம் எனும் நம்பிக்கை எங்கள் அணிக்கு இருக்கிறது. கடைசி கட்டத்தில் இருந்து எப்படி வெற்றி பெறுவது என்பதற்கான ப்ளூ ப்ரிண்டை பெங்களூரு அணி கடந்தாண்டு விளையாடி எங்களுக்கு அமைத்துக்கொடுத்திருக்கிறார்கள் எனலாம். 

ஒருவேளை நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிப்பெறாவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் ஒரு புரிதலோடு இருக்கிறோம். நாங்கள் கடந்த காலங்களிலும் இதே மாதிரியான நிலையை சந்தித்திருக்கிறோம். ஆனால், பிரச்சனைகளை கண்டறிந்து அதை சரி செய்து அடுத்த ஆண்டே சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றிருக்கிறோம். அடுத்து வரும் அத்தனை போட்டிகளையும் எங்களை சரி செய்துகொள்வதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறோம். எந்த வாய்ப்பையும் தவறவிடமாட்டோம்.’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.