Sumo Review: இது சீரியஸ் படமா, ஸ்பூஃப் படமா? ஜப்பான் வீரரும் சோதிக்கும் காமெடி கலவரமும்!

சென்னை கோவளத்தில் உணவகம் நடத்தும் ஜாக் (விடிவி கணேஷ்), செக்போஸ்டில் போலீஸ்காரரிடம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் சிக்கிக் கொள்கிறார். அவரது காரில் ஒரு பெட்டி இருக்கிறது. அதைத் திறக்க அனுமதிக்காத அவர், அந்தப் பெட்டியின் பின்னணிக் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அதில், அவரது உணவகத்தில் பணிபுரியும் சிவா, சர்ஃபிங் செய்யச் சென்ற ஒரு நாளில், கடலில் அடித்து வரப்பட்ட யோஷினோரி தாஷிரோவை காப்பாற்றிய கதை அடங்கியிருக்கிறது. யோஷினோரியை இவர்கள் எப்படிப் பராமரித்தார்கள், உயிர் பிழைத்த அந்த ஜப்பானியர் உண்மையில் யார், பெட்டிக்குள் என்ன இருக்கிறது போன்ற கேள்விகளுக்கான பதிலை, நீச்சல் அடித்து ஜப்பானுக்குச் சென்று வந்த உணர்வில் சொல்கிறது இந்த ‘சுமோ’.

Sumo Review
Sumo Review

உணர்வுபூர்வமான காட்சிகளிலும் சிரிப்பை வரவழைக்கும் நடிப்பு என தன் வழக்கமான டெம்ப்ளேட்டில் ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ சிவா. குறிப்பாகச் சோக இசை வாசிக்கப்படும் இடத்தில் “பாட்டி” என்று கண்களைக் கசக்கி நிற்கும் காட்சி, ‘தமிழ்ப் படம்’ வைப்ஸ்! ஆனா இது ஸ்பூஃப் படமில்லையே சிவா! கண்ணில் தெரியும் உணவையெல்லாம் சாப்பிடுவது, அப்பாவியாக முகத்தை வைத்திருப்பது என யோஷினோரி தாஷிரோவை இயக்குநர் ஒரு கண்காட்சிப் பொருளாக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார். ‘டெம்ப்ளேட் நாயகி’ என்று சொல்லும் அளவுக்குக் கூட ப்ரியா ஆனந்துக்கு திரை நேரமோ, பாத்திர வடிவமைப்போ இல்லை.

‘மனுஷ திமிங்கலம்’, ‘குண்டு பையன்’, ‘தடியன்’ என்று உடல் பருமனை வைத்து உருவக் கேலி செய்வதெல்லாம் நகைச்சுவை என்ற பெயரில் பாடாய்ப்படுத்துகிறார் விடிவி கணேஷ். அவருடன் போட்டிப் போட்டு, ஜப்பான் ஆலோசனை மையத்தில் வேலை செய்பவராக வரும் ஸ்ரீநாத், விதவிதமான ஜப்பானிய ஆடைகளை அணிவது, புருவத்தில் மை பூசி ‘காஸ்பிளே’ செய்வது ஆகியவற்றை காமெடி என்று நம்பச் சொல்லி நம்மை வெறுப்பேற்றுகிறார். அந்த 5 ரூபாய் காமெடி மட்டும் ஆறுதல்! யோகி பாபு, சம்பிரதாய கடமைக்காக உருவாக்கப்பட்ட துணைக்கதையில் வந்து போகிறார். ஆனால் அது கதைக்கு எந்த வகையிலும் உதவவில்லை.

Sumo Review
Sumo Review

சண்டைக் காட்சிகளில் மாஸ் பின்னணி இசை, உணர்வுபூர்வமான இடங்களில் சோக வாத்தியங்கள் என அனைத்தும் நிவாஸ் கே.பிரசன்னாவிடம் இருந்து பெறப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு நியாயம் செய்யும் காட்சிகளோ, மேக்கிங்கோ இல்லாததால், குஸ்தி வீரர்கள் இல்லாமல் மைதானத்தைத் தயார் செய்த கதையாகிறது. ஜப்பான் பகுதிகளும், சுமோ சண்டைக் காட்சிகளும் ஓரளவு குறை சொல்ல முடியாதவையாக இருந்தாலும், மற்ற காட்சிகளைப் பார்த்துவிட்டு ஒளிப்பதிவு ஏரியாவில் ராஜீவ் மேனனின் பெயரைப் பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சுகிறது. படத்தின் ஒட்டுமொத்த ஆக்கமும் மிகவும் சுமாரான தரமே! எழுத்திலும் ஸ்டேஜிங்கிலும் எந்தவித சிரத்தையும் எடுக்காமல் இருப்பதும் பெரும்பாலான காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது. இதனால் உண்டாகும் குழப்பத்தை, படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல்-ன் நிலையிலிருந்து நம்மால் உணர முடிகிறது.

படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கதைக்குள் நேரடியாக நுழைகிறது. ஆனால், அதன் பிறகு கதாபாத்திரங்களை விரிவாக்காமல், தட்டையான எழுத்தால் சோதிக்கத் தொடங்குகிறது. மையக் கதாபாத்திரமான யோஷினோரி மீது விநோதமான உணர்வைத் திணிக்க, நகைச்சுவை என்ற பெயரில் உணவு சாப்பிடும் போட்டி, விநாயகர் வேடமிடும் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை ரசிக்கும்படியாகவோ, கதைக்கு உதவும்படியாகவோ இல்லை. யோகி பாபுவின் துணைக்கதை சிரிப்பையோ, நம்பகத்தன்மையையோ தராமல், தியேட்டரிலும் ‘ஸ்கிப்’ பொத்தானைத் தேட வைக்கிறது. இவ்வாறு எதிலுமே உணர்வுபூர்வமான தொடர்பு இல்லாததால், படம் ஆரம்பத்திலேயே நம்மை விட்டு விலகிவிடுகிறது.

Sumo Review
Sumo Review

‘சுமோ’ என்று பெயர் வைத்தாலும், இடைவேளை வரை யோஷினோரி ஒரு சுமோ வீரர் என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.பி. ஹோசிமின். இது, “என்னது, ராக்கெட் ராஜா ஒரு திருடனா?” என்று அதிர வைக்கும் லாஜிக்தான்! இரண்டாம் பாதியில் ஜப்பானுக்கு இடம் மாற்றப்பட்டு, சுமோ விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதை வைத்து விளையாட்டு, யோஷினோரியின் நினைவுகள் மீட்பு, ஜப்பான் கலாசாரம் எனத் திரைக்கதையைச் சுவாரஸ்யமாக்கவும் வாய்ப்பு இருந்திருக்கிறது. ஆனால், அந்த வாய்ப்பை வீணடித்திருக்கிறார்கள். லாஜிக் மீறல்கள் இருக்கலாம், ஆனால் ஜப்பானில் ஒருவரை அடித்து இந்தியக் கடற்கரையில் வீசுவது போன்ற மிகையான கற்பனை எல்லாம் ரொம்ப ஓவர் பாஸு!

ஒன்லைன் ஓரளவு ஆர்வத்தைக் கொடுத்தாலும், உருவக் கேலியின் குவியலாலும், சுவாரஸ்யமற்ற திரைக்கதையாலும், இந்த ‘சுமோ’ மிகவும் சுமாரான குஸ்தியாகவே நடந்து முடிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.