அதிகாரம் என்பது இந்தச் சமூகத்துக்கும், சக மனிதர்களுக்கும், எளியோர்களுக்கும் உதவுவதாகவும் அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பயன்படுவதாகவும் அமைய வேண்டும் என்று யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
‘நான் முதல்வன்’ திட்டம் மற்றும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இந்திய குடிமைப் பணி தேர்வில் 50 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் கல்வியை மேம்படுத்த வேண்டும். எப்படிப்பட்ட போட்டித் தேர்வாக இருந்தாலும், அதை வெல்லும் அளவுக்கு நம்முடைய மாணவர்களுக்குப் பயிற்சி கிடைக்க வேண்டும் என முடிவெடுத்தோம். அதற்காக ‘நான் முதல்வன்’ என்று திட்டத்தை 2022-ல் தொடங்கினோம். சாமானிய வீடுகளில் பிறந்து சாதனையாளர்களாக நாளைய வரலாற்றை எழுதக் கூடியவர்களாக வளர்ந்திருக்கின்றீர்கள். கல்விதான் நமக்கான ஆயுதம். எந்த இடர் வந்தாலும், கல்வியை மட்டும் நாம் விட்டுவிடக் கூடாது.
அதனால்தான், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ கொண்டு வந்தோம். அதைத் தொடர்ந்து ‘புதுமைப்பெண்’ திட்டம், ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம், ‘கல்லூரிக் கனவு’ திட்டம், ‘சிகரம் தொடு’ திட்டம், ‘உயர்வுக்குப் படி’ திட்டம் என்று ஏராளமான திட்டங்களை தொடங்கி, கல்வியைக் கொடுத்து, ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களால் திறனை வளர்த்து, பெரிய பெரிய நிறுவனங்களில் நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் பணிக்கு சேர்ந்ததால் பூரிப்பு அடைகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக யுபிஎஸ்சி தேர்வுகளில் நம்முடைய இளைஞர்கள் தேர்வாகிறது குறைந்துவிட்டது. ஆனால், இன்றைக்கு அந்த கவலையை நீங்கள் நீக்கிவிட்டீர்கள். இதுவே, இன்னும் பல பேரை ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ்-ஆக ஊக்கப்படுத்தும். அதிகாரம் என்பது இந்தச் சமூகத்துக்கும், சக மனிதர்களுக்கும், எளியோருக்கும் உதவுவதாக, அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பயன்படுவதாக அமைய வேண்டும். இன்றைக்கு அதிகாரம் உங்கள் கைகளை நோக்கி வர இருக்கிறது. அதை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முதலில் மக்களுடைய மனதில் இடம் பெறவேண்டும். சமூகநீதி, நேர்மை, துணிவு ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, ஏழை எளிய மக்களுடைய உயர்வுக்காகப் பாடுபடுங்கள்.இவ்வாறு முதல்வர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுப் பேசும்போது, “நான் முதல்வன் போட்டித்தேர்வு பிரிவின்கீழ் வழங்கப்படும் அந்த ஊக்கத்தொகை என்பது வெறும் நிதி உதவி கிடையாது. மத்திய அரசு குடிமைப்பணி எனும் உங்கள் கனவின் மீது வைத்திருக்கக்கூடிய முதலீடு ஆகும். நீங்கள் வெளி மாநிலங்களுக்கு பணியாற்றப் போனாலும், நீங்கள் பணி செய்கின்ற விதம், நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகிறீர்கள் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக அமைய வேண்டும். வருங்காலத்தில், குறைந்தது 100 பேராவது வெற்றி பெற வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் முதன்மைத் தேர்வுக்கு தங்கிப்பயின்ற பா. சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23-வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும், ர.மோனிகா அகில இந்திய அளவில் 39-வது இடத்தையும், மாநில அளவில் 4-வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், தமிழ் வழியில் தேர்வு எழுதிய சு.சங்கர்பாண்டியராஜ், மாற்றுத்திறனாளி ப.காமராஜ் ஆகிய இரண்டு பேர் அடங்குவர். மேலும், வெற்றி பெற்றவர்களில் 11 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.