தெஹ்ரான்: தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அணுசக்தி தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஓமனில் தொடங்கிய அதே நேரத்தில், தெற்கு ஈரானில் சனிக்கிழமை இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இந்த பயங்கர வெடிப்புச் சம்பவம், எதனால் நிகழ்ந்தது என்ற உறுதியான காரணம் இதுவரை தெரியவில்லை. என்றாலும், துறைமுகத்தில் உள்ள கன்டெய்னர்களில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜெருசலேம் போஸ்ட் தகவலின்படி, இஸ்லாமிக் புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) கப்பல் தளம் அருகே இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. எனினும், இந்தச் சம்பவத்தில் தொடர்பு எதுவும் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை மறுத்துள்ளது. சமூக ஊடங்களில் பரவி வரும் வீடியோக்களில், பயங்கர வெடிப்புக்கு பின்பு கரும்புகையானது மேகம் போல மேலெழுவதைக் காண முடிகிறது. மற்றொரு வீடியோவில் சேதமடைந்த வாகனங்கள், கட்டிடங்களைப் பார்க்க முடிகிறது. இதனிடையே சிலர் காயமடைந்தவர்களுக்கு உதவுவதும், சேதங்களை ஆய்வு செய்வதும் பதிவாகி உள்ளது.
உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறுகையில், ‘ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் பல கன்டெய்னர்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இந்த வெடி விபத்துச் சம்பவம் நடந்துள்ளது. காயம் அடைந்தவர்களை வெளியேற்றி சிகிச்சைக்கு அனுப்பும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. உள்ளூர் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றி வரும் நிலையில், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
இந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 281 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானின் அதிகாரபூர்வ ஊடகச் செய்தியில் முதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இந்தச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஷாகித் ராஜேய் துறைமுகம் என்பது எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல்களை கையாளும் வசதிகள் கொண்ட, மிகப் பெரிய கன்டெய்னர் போக்குவரத்துக்கான முக்கிய கேந்திரமாகும் என்பது கவனிக்கத்தக்கது.
அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ,ஸ்டீவ் விட்காஃப், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் இடையே ஓமனில் அணுசக்தி பேச்சுவார்த்தை நடந்து வரும்நிலையில், இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொருளாதார தடைக்களுக்கான நிவாரணங்களுக்காக ஈரானின் அணுசக்தி திட்டங்களைக் குறைப்பதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம்.