லக்னோ,
பாகிஸ்தான் மாநிலம் சிந்து மாகாணம் ஜகோபாபாத் நகரை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (வயது 32). இவருக்கு குலாம் ஹைதர் என்ற நபருடன் திருமணமாகி 4 குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே, பப்ஜி விளையாட்டு மூலம் சீமா ஹைதருக்கு உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா (வயது 25) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதையடுத்து, சீமா தனது 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் சென்றார். சச்சினும் நேபாளம் சென்று சீமாவை சந்தித்தார். பின்னர் இருவரும் அங்கு திருமணம் செய்து கொண்ட நிலையில், நேபாளம் வழியாக கடந்த 2023-ம் ஆண்டு சீமா மற்றும் அவரது 4 குழந்தைகளை அழைத்துக்கொண்டு சச்சின் சட்டவிரோதமாக இந்தியா வந்தார்.
பின்னர் சச்சினும், சீமாவும் 4 குழந்தைகளுடன் கிரேட்டர் நொய்டாவில் வாடகை வீட்டில் வசித்துள்ளனர். இந்த விவகாரம் அதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில் சீமா மற்றும் அவரது 4 குழந்தைகளையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
தொடர்ந்து தனது கணவர் சச்சினுடன் கிரேட்டர் நொய்டா பகுதியில் வசித்து வரும் சீமா, தற்போது இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சீமாவுக்கு, சச்சினுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்ததது.
இந்த சூழலில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பத்தில் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழலில் நிலவி வருகிறது. பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சீமா ஹைதர் தன்னை இந்தியாவில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் பாகிஸ்தானின் மகளாக இருந்தேன். தற்போது நான் இந்தியாவின் மருமகள். பாகிஸ்தானுக்கு செல்ல நான் விரும்பவில்லை. என்னை இங்கேயே இருக்க அனுமதிக்குமாறு பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறுகையில், “சீமா ஹைதர் இனி பாகிஸ்தான் குடிமகள் அல்ல. அவர் கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் சச்சின் மீனாவை மணந்துள்ளார். சமீபத்தில் அவர்களுக்கு பாரதி மீனா என்ற மகள் பிறந்தார். சீமாவின் குடியுரிமை இப்போது அவரது இந்திய கணவருடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசின் வெளியேற்ற உத்தரவு அவருக்கு பொருந்தாது” என்று தெரிவித்தார்.